அண்மையில் வெளிவந்திருக்கும் புத்தகம், ‘பத்துப்பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படை மூலம்!’ இது, வி.கந்தசுவாமி முதலியாரின் உரை விளக்கம் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் வெளியிடப் பெற்றிருக்கிறது.
இதில் சிறுபாணாற்றுப்படையில் இடம்பெற்ற சொற்களுக்குப் பொருள் தெரிந்துகொள்ளும் வகையில் கூடுதலாக சொற்பொருள் விளக்கம் என்பதும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இப்புத்தகத்தை 1947ல் வி.கந்தசாமி முதலியார் வெளியிட்ட, ‘சிறுபாணாற்றுப்படை விளக்கம்’ என்பதன் மறுபதிப்பாகக் கொள்ள முடியும்.
சங்க இலக்கியமான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டுள் இடம்பெற்ற, 18 நுால்கள், 1880க்கும், 1960க்கும் இடைப்பட்ட காலங்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சா.,
போன்றோரால் அதனுடைய பழமையான உரைகளுடன் அச்சிடப்பட்டு, தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டன.
பழமை உரைகளுடன் கூடிய அந்நுால்களை அனைவரும் எளிதில் படித்துப் பொருள் கொள்ள இயலாது என்று கருதிய பள்ளியாசிரியரான வி.கந்தசுவாமி முதலியார் என்பவர், சிறுபாணாற்றுப்படை என்ற நுாலுக்கு எளிய உரை செய்து, பிற மொழியாளரும் படிக்க வசதியாக ஆங்கிலத்தில் விளக்கமும் எழுதி, 1947ல், ‘சிறுபாணாற்றுப்படை விளக்கம்’ எனும் பெயரில் வெளியிட்டார்.
அதன் மறுபதிப்பாகும் இந்நுால். சிறுபாணாற்றுப்படையை எளிதாகப் படித்துப் பொருள் கொள்ள இந்நுால் பயன்படுவதுடன், தமிழுக்கு செய்யப்பட்ட ஆரவாரமற்ற உண்மைத் தொண்டாகும்.