தா.சுவாமிஜி எழுதியுள்ள இந்த ஆங்கில நுால், ஆன்மிகம் தொடர்பானது. ஒருவரின் உள் ஒளியைக் காண்பதற்குரிய வழிமுறைகளையும், தன்னை அறிவதற்குரிய நெறிமுறைகளையும் விளக்குகிறது.
மகா அவதார் பாபாஜியைக் குருவாகக் கொண்டு, தன்னை அறிவதற்கான யோக நிலையைப் பயிற்று வருபவர், இந்த நுாலின் ஆசிரியர், ஆன்மிகக் குரு தா.சுவாமிஜி. அவர் கிரியா யோகத்திற்குரிய வழி காட்டி.
‘நான் யார் என் உள்ளம் ஆர்’ என்ற வழக்கும், ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை’ என்ற வழக்கும், தமிழில் வழிவழி வந்த ஆன்மிகத்திற்கான பாதையை வழிவகுப்பன. இதன் அடிப்படையில் அமைந்திருக்கும் இந்நுால், ஆன்மிக அறிவையும், தெளிவையும் போதிக்கும். நான்கு பகுதிகளைத் தமிழில் தந்திருக்கும் ஆசிரியர், ஆங்கிலத்தில் அவற்றிற்கான எளிய விளக்கத்தை அளித்துள்ளார்.
முதல் பகுதி, 36 கொள்கைகளை வலியுறுத்துகிறது. இரண்டாவது பகுதி குணாம்சம், சான்றோரின் வாய்மைச் சொற்கள் பற்றிய, 21 கொள்கைகளைக் கொண்டது. மூன்றாவது பகுதி தெய்வீக ஆற்றலால் உடல், உள்ளம் சார்ந்த நோய்களுக்குத் தீர்வு சொல்வதாக அமைந்தது.
இறுதிப்பகுதி நித்திய உண்மை மற்றும் சில ஐயப்பாடுகள் பற்றிய தெளிவு ஆகியவற்றைக் கூறுகிறது. ஆன்மிக அன்பர்கள் பயன்பெறும் வகையில், ஆங்கிலத்தில் எளிமையும், சுருக்கமும் கொண்ட நுால், அந்த நான்கு பகுதிகளுக்குரிய மூலத்தை, தமிழ்ப் பெயர்ப்பாகத் தந்துள்ளது. ஆன்மிக அன்பர்களுக்கு உகந்த ஆங்கில நுால் இது.
–ராம.குருநாதன்