செவிலியர் பணி சார்ந்த கட்டுரைகளை, 40 ஆண்டுகளுக்கு மேலாக செவிலியராக பணிபுரிந்து, பணி ஓய்வுக்கு பின்னும் அயராது, முதியவர்களை பேணி காக்கும் கவுசல்யாவும், முதியோர் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளை, டாக்டர் நடராஜனும் இணைந்து எழுதியுள்ளனர்.
பயிற்சி பெறும் செவிலியர்கள் மற்றும் வீட்டில் முதியோரை கவனித்து கொள்பவர்கள், படித்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட இந்நுாலில், முதியோர் நல மருத்துவம், முதியோருக்கான செவிலியர் பணி, முதுமைக்கால நோய்கள், முதியோருக்கான உணவு, மருந்து, உடற்பயிற்சி, பரிசோதனைகள் என, விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
முதியோர் இல்லம், அவற்றின் பராமரிப்பு, அவர்களுக்கான சிகிச்சை முறைகள் என, எழுதப்பட்டுள்ள இந்நுால், செவிலியர் பயிற்சிக் கல்லுாரிகளில் ஒரு பாட நுாலாக வைக்கும் அளவிற்கு அனுபவப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளது.
முதியோருக்குச் சேவை செய்வதையே வாழ்வில் தனக்கு கிடைத்த பெரும் பேறாக கருதி, சேவை செய்வதையே வலியுறுத்தும் இந்நுால், படித்து பயன் பெற தக்க நுாலாகும்.
–பின்னலுாரான்