நூலகத்தால் உயர்ந்தேன்!

விலைரூ.1200

ஆசிரியர் : ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

வெளியீடு: வசந்தா பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ் இலக்கிய  துறைகள் தோறும் தம் தடம் பதித்து, மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து,  இன்றும் தரமான இலக்கியங்களை படைத்து வரும், முனைவர் ஆலந்துார் மோகனரங்கன்  தம் வரலாற்றோடு, 2,500 சான்றோர்களுக்கு இந்நுாலில் கவுரவம் சேர்த்துள்ளார்.
குழந்தை  பருவத்தில் இருந்து, முரட்டுத்தனம், பிடிவாதம், எவருக்கும் அடங்காமை,  அஞ்சாமை முதலியவை வளர்ந்த பின், வேறு வடிவம் பெற்றன. முரட்டுத்தனம் – கொண்ட  கொள்கையிலிருந்து பிறழாமை ஆனது. பிடிவாதம், விடா முயற்சியும் தளரா  உழைப்புமாக மாறியது.  
எவருக்கும் அடங்காமை – தனியே செயல்புரியும் தறுகண்மை  ஆயிற்று. அஞ்சாமை, எத்தனை துன்பம் வரினும், அயராமல், கலங்காமல்  எதிர்நீச்சல் இடுகின்ற துணிவாக மாறியது. பிற்காலத்தில்,  என் குழந்தை  பருவத்தை எண்ணிப் பார்த்தேன். நான் வளர வளர சந்தித்த மாந்தரும், சந்தித்த  நிகழ்ச்சிகளும் என் வளர்ச்சிக்கு வழிகாட்டின (பக். 78) என, சுய தரிசனம்  தந்துள்ளார்.
‘கடனாளி என்ற நிலை மட்டும் மாறவில்லை’ (பக்.144) என்று  எழுத்தையும், எழுதுகோலையும் தெய்வமாக பாவிக்கும் இக்கவிஞர், தன் வரலாற்றை  பாவேந்தரின், இருண்ட வீட்டில் துவங்கி, தமிழியக்கத்தில் நிறைவு  செய்துள்ளார்.
தாய், தந்தை, உறவினர்கள், ஆலந்துாரின் அடையாளங்கள்,  சந்தித்த சான்றோர்கள், இளமைக்கால கல்வி, 1959ல் பல்லாவரம் கார்டன் உட்ராப்  தோல் தொழிற்சாலை பணி, 1960 – 1989 வரை பெரும் திருப்புமுனையை உருவாக்கிய  நுாலகர் பணி, 47ம் வயதில் விருப்ப ஓய்வு, அதற்கு பின் இலக்கியப் பணி என,  450 பக்கங்கள் வரை விறுவிறுப்பாக புதினம் போன்று அமைந்துள்ளது.
கடந்த,  1956ல் திலகரை பற்றி மாணவராக இருந்த போது, பேச்சுப் போட்டியில் பேசி,  அன்றைய ஆளுனர் ஸ்ரீபிரகாசா அவரிடம் பரிசு பெற்ற கவிஞர், இலக்கியத்துறையில்  இன்றளவும் ஏராளமான பரிசுகள், விருதுகள் பெற்று வருகிறார்.  
நுாலை இன்னும் காலவரிசை முறைப்படுத்தி, நுாலாசிரியரின்  சுருக்க வரலாற்றுக் குறிப்புடன் வெளியிட்டிருந்தால், ஓரளவு முழுமை  எட்டியிருக்கும், எனினும் அவரது அயராத உழைப்பை பாராட்டி, நுாலை வாங்கி பயன்  பெறலாம்.
–பின்னலுாரான்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us