இன்று உலகில் புகழ் பெற்ற முதல் இருபது அறிவு ஜீவிகளில் ஒருவர் உம்பர்ட்டோ ஈகோ. நாவலாசிரியர், கட்டுரையாளர், பண்பாட்டாய்வாளர் என, பன்முகத்தன்மை கொண்ட இவர், 30க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றவர்.
அவரது நுாலிலிருந்து, நான் எப்படி எழுதுகிறேன், நடை, இலக்கியத்தின் சில செயல்பாடுகள், அரிஸ்டாட்டிலின் கவிதையிலும் நாமும், கம்போரேசி ரத்தம், உடல், வாழ்வு, பொதுவுடைமை அறிக்கையின் நடையை குறித்து, 2005ல் புதுச்சேரி வந்திருந்த அவரை பேட்டி கண்டு எழுதப்பட்ட, ‘நான் வெறுமை வெளிகளில் வினைபுரிகிறேன்’ ஈறாக ஏழு மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன.
‘எல்லாருக்கும் பருவ காலங்களில் வரும் முகப்பரு போலவே, என் கவிதைகளும் ஒன்று போல் வெளிப்பட்டுள்ளன – இத்தகைய சுயவிமர்சனம் காரணமாக, கவிதை எழுதுவதை கைவிடுவது என்று தீர்மானித்தேன்’ (பக்.,22), என்று கவிதை களத்திலிருந்து விலகி, 46 வயதில் முதல் நாவலை எழுதிய இவர், ‘எழுத்தாளர் ஒருவர் அடிப்படையான சிந்தனை ஒன்றல் இருந்து தான் தன் படைப்பைத் துவங்குகிறார்.
‘அவர் கட்டமைத்துக் கொள்ளும் புனைவுலகப் பின்னணி தான் நடையை நிர்ணயிக்கிறது’ (பக்.,37) என்கிறார்.
‘தன் வாழ்நாளில் ஒருமுறை கூடத் நுாலை வாசித்ததே இல்லை என்று சொல்லக்கூடிய புதிய இளைஞர்கள், இன்றைய கணினி, யுகத்தில் உருவாகி விட்டனர்’(பக்.,73) என்று வேதனைப்படும் அவர், ‘எதிர்கால வாசகர்களுக்கு எதுவும் சொல்லாத ஒரு எழுத்தாளர்; உண்மையில் மகிழ்ச்சியற்றவர், நம்பிக்கை இழந்தவர்’ (பக்.,50) என்று கூறும் இந்த எழுத்தாளரின் மொழிபெயர்ப்புகள், சிந்தனைக்கு விருந்தளிப்பவை.
– பின்னலுாரான்