இந்த நாட்டின் ஒப்பற்ற காவியமான மஹாபாரதத்தை, ‘ஐந்தாம் வேதம்’ என, பலரும் புகழ்கின்றனர். மஹாபாரதத்தை தமிழில், வில்லிபுத்துாரார் பாடியுள்ளார். பலரும் உரைநடையாக, எழுதிஉள்ளனர்.
எத்தனை முறை படித்தாலும், அலுப்பு தட்டாத மஹாபாரதத்தை, விலாவாரியாக, ஒரு சம்பவத்தை கூட விடாமல், ஐந்தாம் வேதம் என்ற பெயரில் ஆசிரியர் எழுதியுள்ளது, மிகச் சிறப்பு.
மஹாபாரத கதையை ஆதியிலிருந்து, முடியும் வரை, ஆசிரியர் எளிமையாக, குழந்தைகளும் விரும்பி படிக்கும் வகையில் தந்துள்ளார். எந்த கதாபாத்திரத்தின் மீதும் தன்னுடைய கருத்தை திணிக்காமல், உள்ளது உள்ளபடியே ஆசிரியர் எழுதியிருப்பது, பாராட்டத்தக்கது.
குறிப்பாக, கர்ணன் கதாபாத்திரத்தின் மீது தமிழக மக்களுக்கு ஒரு பற்றும், பரிவும் உண்டு. அதையும், ஆசிரியர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கர்ணனை மிகவும் சிறந்தவனாக ஆசிரியர் சித்தரிக்காமல், வியாசர் கூறியுள்ளபடியே எழுதியுள்ளது அருமை.
குருக்ஷேத்திர யுத்தம் முடிந்த பின், பாண்டவர்களுக்கு, அம்பு படுக்கையில் படுத்தபடி, விஷ்ணு சகஸ்ரநாமத்தை, பிதாமகர் பீஷ்மர் உபதேசிக்கிறார்.
விஷ்ணு சகஸ்ரநாமம் ஸ்தோத்திரத்தை பலரும் அறிந்திருப்பர். ஆனால், அதற்கான அர்த்தம், பலருக்கும் தெரியாது.
விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கு, முழுமையாக தமிழில் அர்த்தம் கூறியிருப்பது, ஆசிரியரின் சமஸ்கிருத புலமையை வெளிப்படுத்துகிறது.
இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகங்களை படித்தால், மஹாபாரதத்தை முழுமையாக, எளிதாக அறிந்து கொள்ளலாம்.
விற்பனைக்கு அல்ல என்பதின் மூலம், நாட்டின் பழமையான காவியத்தை விரும்புவோர், இந்த இயக்கத்திற்கு கணிசமான நிதி தந்து உதவ வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளது சிறப்பாகும்.
–ச.சு.,