ஒவ்வொரு மனிதனும் ஒரு கதைச் சுரங்கம். துன்பத்தாலோ, தோல்வியாலோ, மகிழ்ச்சியாலோ, கிளர்ச்சியாலோ பாதிக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஆழ்மனதில் கெட்டியாகப் பதிந்து விடுகின்றன.
சொல்லி மகிழவும் அழவும் ஒவ்வொருவருக்கும் பல கதைகள் உள்ளன. தன் வாழ்க்கையில் நடந்தவை பிறரது திருத்தமான வாழ்வுக்குப் பயன்படக்கூடும் என்று எண்ணுபவர்கள் அவற்றை நுாலாக ஆவணப் படுத்துகின்றனர். மற்ற சில செல்வாக்கினரின் வாழ்க்கையைப் பிறர் முன்வந்து நுாலாக்குவதும் உண்டு.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய முனைவர் சாதிக், தம் நீண்ட வாழ்வில் நடந்த சம்பவங்களைத் தொகுத்துத் தன்வரலாறாக்கும் முயற்சியில் மூன்றாம் பாகத்தையும் நுாலாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தன் முனைவர் ஆய்வுப்படிப்பைக் கனடாவில் மேற்கொண்டு பயணப்பட்டு, அங்கே நடந்த சிறு சிறு சம்பவங்களையும் இந்நுாலில் பதிவு செய்திருக்கிறார். திரும்பியபின் பேராசிரியர் பதவிகளில் தான் எதிர் கொண்ட பிரச்னைகள், தடைகள், எதிர்ப்புகள் என எல்லாவற்றையும் எளிய உரைநடையில் பகிர்ந்து கொள்கிறார். கூடுதலாக, கல்வித்துறை சார்ந்த பல தகவல்கள், மாணவர்களுக்கு ஏற்ற படிப்பினைக் கருத்துகள் போன்றவற்றையும் நுாலில் இடம்பெறச் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தன் நண்பர்களை அரவணைத்து, ஆசிரியர்களை மதித்து, நேர்மையாக படிப்படியாக முன்னேறியதை, அங்கங்கே நிகழ்ந்த சம்பவங்களோடு பொருத்திக் கூறியிருப்பது, இளைய தலைமுறைக்கு வழிகாட்டக் கூடும்.
– மெய்ஞானி பிரபாகரபாபு