பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அரசியல்வாதி என்பதுடன் சமூகப் போராளியாக கருதப்படுபவர். அரசுப் பதவிகளுக்கு ஆசைப்படாத அவர் குறித்து, இம்மலரில் பல்வேறு தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
போதை மற்றும் மதுவுக்கு எதிரானவர் என்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த, 1989 ஜூலையில் பா.ம.க.,வை உருவாக்கிய அவர், 80 வயதைக் கடந்தாலும், மனதளவில் இளமையானவர்; போராட்டங்களையும் விரும்புபவர்.
அன்புமணி ராமதாஸ் தன் கருத்தில், ‘கொள்கைப்பிடிப்பில் அவரைப் பிடிவாதக்காரராக பார்க்கிறேன்; பயம், பாசம், மரியாதை இவற்றைத் தாண்டி அய்யாவை பிரமிப்புடன் பார்க்கிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
அவரை, ‘சுவை மிக்க பலாப்பழ மனிதர்’ என தமிழருவி மணியனும், தமிழ் மொழி மற்றும் இசைக்காக, 27 அமைப்புகள் தொடங்கியவர் என ஒரு கட்டுரையிலும், கச்சத்தீவை மீட்க விரும்பியவர் என்பது உட்பட பல தகவல்கள் உள்ளன.
மலர்கள், இயற்கை மீது அவர் கொண்ட காதல், குடும்பத்தினர் மீதான பாசம் ஆகியவையும் வண்ணத்தாளில், வண்ணப் படங்களாக விளங்குகின்றன.
– பாண்டியன்