ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புத் தரவுகளை மணம் வீசும் மலர்களாக்கி தொடுத்து மகிழ் மாலையாக்கும் வித்தையை ஒருவர் கற்றிருந்தால் மட்டுமே, அந்தப் படைப்பு வரவேற்பைப் பெறும் என்ற கருத்தை, முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தன் முன்னுரையில் கூறியிருப்பதை, இந்த தமிழ் கூறும் நல்லுலகம் அறிய, இந்த நுால் ஒரு சிறந்த உதாரணம்.
தமிழ் நாளிதழ், ‘தினமலர்’ எழுத்துச் சீர்திருத்தம். கணினியில் எழுத்துருவப் பணி, என பல பயணங்களை சிறப்பாக தாண்டி, தேசிய தமிழ் நாளிதழாக தொடர்ந்து தமிழக நெஞ்சங்களில் நிற்பதற்கு, அதன் ஆசிரியர் ஆர்.கே., என்ற பெருமதிப்பிற்குரிய பெயர் பெற்ற ரா.கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய பணிகள் பலப்பல.
பொதுவாக, தமிழ் எழுத்துகள் அதிகம். ஆங்கிலத்தில் உள்ள குறைந்த எழுத்துகள் கொண்டிருந்த ஆளுமையைத் தாண்டி, நாளிதழில் முத்திரை பதிக்க பயணித்த பாதையில், செம்மை நிறைந்த சூழலை உருவாக்க இவர் செய்த சாதனைகள் பல.
எழுத்துருவாக்கம், விரைவாக கணினியில் பணியாற்ற, தமிழ் எழுத்துக்கள் வரிசைப்படுத்துவதில் சில புதிய கருத்துருக்கள் ஆகியவை மட்டும் அல்ல, தென்பாண்டி நாடு என்ற பழமை பகுதியை சேர்ந்த இவர், நாணயங்களை ஆய்வு செய்யும் பணியில் காட்டிய ஆர்வம், இன்று அவரை உலக அரங்கில் பலரை உற்று நோக்க வைத்திருக்கிறது.
அதிலும், சங்ககாலம் என்பதை பலரும் நமது பழமை மிக்க பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நுால்களை கொண்டு, ‘முன்தோன்றி மூத்த தமிழ்க்குடி’ என்று பேசியதற்கு, காலவரையறை கூற முடியாமல் தவித்தனர்.
பல வரலாற்று ஆசிரியர்கள் இதற்கு அளிக்காத முக்கியத்துவத்தை, கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 1985ல் தொடங்கிய நாணய ஆய்வுகள் தொடக்கமாக அமைந்தது. அது, நாணயவியல் துறை ஆய்வுக்களங்களில் கட்டுரைகளாக நறுமணம் வீசும் மலர்களாக, 50ஐ தாண்டியது வரலாறு.
மேலும், ‘தொல்காப்பியர் விருது’ பெற்ற இவர், தன் சொந்த மண்ணான தென்பாண்டி நாட்டின் பெருமையைக் காட்டும் பெருவழுதி நாணயத்தில் உள்ள சிறப்புகளை, நாணயவியல் மாநாடு மூலம் உலகிற்கு அறியச் செய்தது, தமிழன் தலை நிமிர்ந்து, தன் நாகரிகத்தை பேச வைத்தது எனலாம்.
இந்திய நாணயவியல் சங்கக் கருத்துப்படி, ‘தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய கதவுகளை திறந்துள்ளது’ என்ற கருத்து முற்றிலும் அவரது இப்பணிக்கான அங்கீகாரமாகும்.
சங்க இலக்கிய வார்த்தையான, ‘பெருவழுதியை’ நாணயத்தில் காட்டி, பெருமை சேர்த்தது மட்டுமின்றி, மத்திய தரைக்கடல் பகுதி நாடுகள், தமிழகத்துடன் வர்த்தகம் தொடர்பு கொண்டிருந்ததைக் காட்டிய அவரது நாணயக் கண்டுபிடிப்பு ஆதாரங்கள் சிறப்பானவை.
கொற்கை பாண்டியன் நாணயத்தின் மூலம் கடல்கொண்ட கொற்கை குறித்த புதிய தரவுகள், சேர நாணயங்கள், சோழர் நாணயங்கள் என்ற பல ஆய்வுகள் மூலம், இந்தியாவின் தென்பகுதி என்பது காலத்தால் மிகவும் பழமையானது என்பது நிலை நிறுத்தப்பட்டது என்றே கூறலாம்.
இவர் கண்டுபிடித்த நாணயங்கள், எழுதிய பதினைந்துக்கும் மேற்பட்ட நுால்கள், லண்டனில் உள்ள அருங்காட்சியகம் வரை சென்றதுடன், ‘நாணயவியல் ஆய்வுச் செம்மல், நாணயவியல் பேரறிஞர்’ என்ற விருதுகளைப் பெற்ற இவர், எளிமையான சுபாவம் கொண்டவர். தன் சாதனைகளை யாராவது அவரிடம் கூறினால், ‘தமிழ்த்தாய் அருள்’ என்பது அவர் பதிலாக இருக்கும்.
தமிழுக்கு அணிகலான அதன் வரலாற்றுக் காலம், 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதுடன், வணிகம், நாணயம் அச்சிடும் அரசுகள், அந்த நாணயத்தில் உள்ள பல்வேறு உலோகங்கள், அதன் மூலம் அவற்றை உருவாக்கிய திறன் ஆகியவை இன்று மட்டும் அல்ல; வரும் நுாறாண்டுகள் ஆனாலும், இவற்றை உலகிற்கு உணர்த்திய, இரா.கிருஷ்ணமூர்த்தி பெயரும் நிச்சயம் நினைவு படுத்தப்படும்.
அந்த முயற்சியில் ஈடுபட்ட, அவர் எழுதிய நுால்கள் பட்டியல் முழுவதும், பின்னிணைப்பில் உள்ளது சிறப்பு. இந்த நுாலாசிரியர், ஆஸ்திரேலியாவில் இப்போது வழக்கறிஞராக இருந்தாலும், இலங்கை மண்ணைச் சேர்ந்த இவர், தொடர்ந்து தனது, ‘தினமலர்’ நாளிதழில் பணியாற்றிய காலத்தில், மேற்கொண்ட சில கருத்துருக்கள், இந்த நுாலில் பதிவாகி இருப்பதையும் நாம் காணலாம்.
வண்ண அட்டைப் படம், தமிழகத்தின் பழமையை வெளிச்சமிட்ட இரா.கிருஷ்ணமூர்த்தியின் தோற்றத்துடன் வெளியாகி, சிறப்பான அச்சுக் கோப்பு மற்றும் தகவல்களுடன் மிளிர்கிறது. தமிழகத்தின் பெருமை விரும்பும் அனைவரும், இந்த நுாலை வாசித்து, தங்கள் பெருமையை நினைத்து மகிழலாம். புத்தக தேவைக்கு: 1800 – 4257700
– பாண்டியன்