உவமையும் உருவகமும் சாதாரண மக்களின் பேச்சில் மிகவும் இயல்பாக வெளிப்படும். ‘அவன் மனது ஒரு கல்லு’ எனச் சொல்லும் தொடரில், மனதைக் கல்லாக உருவகப்படுத்துவதைக் காண முடியும். ‘மலை போல் வந்த துன்பம் எல்லாம் பனி போல் விலகி விடும்’ என்னும் உவமைத் தொடரையும், வேறு உவமைத் தொடர்களையும் சாதாரண மக்கள் மிகுதியாகப் பயன்படுத்துவர்.
சாதாரண மக்களின் மனதில் இயல்பாகப் பதிந்து விட்ட இந்த உவமை பற்றித் தொல்காப்பியம் விளக்கியுள்ள இலக்கணக் கோட்பாட்டை, எட்டு இயல்களிலும், மலையாள முதல் இலக்கண நுாலான லீலா திலகம் என்னும் இலக்கண நுாலில் உவமை பெறும் இடத்தையும் இந்த நுாலில் நுட்பமாக விளக்கியுள்ளார் முனைவர் செ.வை.சண்முகம்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் தொல்காப்பியர் விருதைப் பெற்ற அறிஞர் செ.வை.சண்முகம் படைத்துள்ள தொல்காப்பிய இலக்கணக் கோட்பாடு வரிசை நுால்களில் இது குறிப்பிடத்தக்கது. உவமை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்கும், ஆய்வு செய்வோருக்கும் பயன் தரும் வகையில் அமைந்திருப்பது இந்த நுாலின் சிறப்பு.
– முகிலை ராசபாண்டியன்