கன்னட பகுதியில் இருந்து வந்த சமணர் களப்பிரர், சேர, சோழ, பாண்டியர்களை வென்று தமிழகத்தை ஆண்டனர். ஆனால், இத்தகவல் வரலாற்றில் இருட்டடைப்பு செய்யப்பட்டதாக சான்றுகளுடன் ஆசிரியர் பிரஸ்தாபிக்கிறார்.
களப்பிரர் ஆட்சியில் தமிழகம், இலங்கை அரசர், இருக்குவேள் அரசு, வீழ்ச்சி, சமயங்கள், தமிழ் மொழி, நுண்கலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ந்து ஆதாரங்களை குறிப்புகளோடு தந்துள்ளார்.
களப்பிரர் பற்றிய வாழ்த்துப் பாக்கள், வச்சிர நந்தியின் திரிமிள சங்கம், இறையனார் அகப்பொருள் நக்கீரர் காலம் என இணைப்புகளாகத் தந்துள்ளார். கி.பி., 6ம் நுாற்றாண்டில் கடுங்கோன் பாண்டியன் இலங்கையை வென்று, களப்பிரரிடம் இருந்து தமிழகத்தை மீட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். நிகந்தர் என்று வம்சாவளியில் குறிப்பிடப்படுபவரே களப்பிரர் என்றும் விளக்குகிறார்.
பவுத்தமும், சமணமும் வேரூன்றி விரிந்து கொண்டிருந்த சமயம் சைவ-, வைணவ பக்தி நெறி குறிப்பாக நாயக -நாயகி பாவத்தில் பாடல்கள், அனுபவங்கள், பவுத்த, சமண மதங்களை வீழ்த்தியது என்று விளக்குகிறார்.
அச்சுதன் குலத்தவர் களப்பிரர் என்றும் பதிவு செய்கிறார். கள்ளர் பிரான் தான் களப்பிரரோ? ஆனால், சமணம் தான் அக்காலத்தில் தலைதுாக்கி இருந்ததாக உறுதிபடக் கூறுகிறார். இலக்கியங்களை சீவக சிந்தாமணி துவங்கி, பதினெண் கீழ் கணக்கு நுால்களை பட்டியலிடுகிறார்.
பழமையையும், வரலாற்றையும் புரட்டிப் பார்க்க விரும்பும் வாசகர்களுக்கு, ஏற்ற நுால்.
–
பேரருளாளன்