உலகில் மதங்கள் தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்வதற்காகவும், சைவத்திற்கு உயர்வான சமயமில்லை என்பதை எடுத்துரைக்கவும் எழுதப்பட்டுள்ள நுால். சமயம் தோன்றிய வரலாறு, தொன்மை சமயங்கள், இந்திய வரலாற்றில் சமயங்கள், மக்கள் தொகை அடிப்படையில் சமயங்கள், சைவ சித்தாந்த சாத்திரங்கள், சமயங்கள் ஒப்பீடு, சைவத்தின் சிறப்பு என ஏழு இயல்களாகப் பகுத்து, அரிய தகவல்களை மிகுந்த முயற்சியோடு தேடி ஆராய்ந்து தொகுத்து எழுதியுள்ளார்.
தமிழகத்தில் சமயம் வளர்ந்த வரலாற்றையும், இந்திய அளவில் சமய சீர்திருத்த செம்மல்களின் பணியையும், அவர்கள் வகுத்துரைத்த கோட்பாட்டையும் எளிமையாக விளக்கி சொல்கிறது. மக்கள் தொகை அடிப்படையில், பன்னிரு உலக சமயங்கள் பற்றிய செய்திகள் முக்கியமான பகுதியாக உள்ளன. ஒவ்வொரு சமயத்தை பற்றி தேவையான அளவில் சுருக்கி தந்திருப்பது பாராட்டுக்குரியது. டாவோயிஸம், பஹாய், ஷிண்டோ, ஸோரோஸ்டிரியன் ஆகிய சமயங்களின் வரலாறு, அரிய தகவல்களை கொண்டுள்ளது.
சமய தத்துவங்களை சமய சான்றோர் அணுகியமுறை, அவற்றில் காணப்படும் உண்மைகள், அவை தொடர்பாக படைக்கப்பட்டுள்ள நுால்கள் போன்றவற்றை வகுத்தும், தொகுத்தும் தந்திருப்பது விளக்கமுற அமைந்துள்ளது. இந்த தகவல்கள் அடங்கிய பகுதியை மட்டும், தனியே சிறு நுாலாக கூட வெளியிடலாம்.
அப்படி வெளியிட்டால், உலக சமயங்களின் வரலாற்றுக்கு ஆவண நுாலாகத் திகழும் என உறுதிபட கூறலாம். சைவ சிந்தாந்த கருத்துகளின் சாரத்தை, வரலாற்று அடிப்படையில் விளக்கி சொல்வது பாரட்டும்படி உள்ளது. அரிய சமய தத்துவங்களின் கருத்தை எளிமையாக புரிய வைத்திருக்கிறார் நுாலாசிரியர்.
சமயங்களின் ஒப்பீடு மிகவும் போற்றத்தக்க வகையில் எழுதப்பட்டுள்ளது. இறுதி இயலில், சைவம் குறித்த அனைத்து செய்திகளையும் வரலாற்று அடிப்படையில் அகச்சான்று வழியும், புறச்சான்று வழியும் தெளிவுபடுத்தி, சைவத்தின் மேன்மையை சிறப்புற வழங்கியுள்ளார். இந்த நுால், சைவ பெருமக்கள் கைகளில் கிடைத்திருக்கும் கனி எனல் தகும்.
இந்த நுால், சைவ சமயத்தவர் கொண்டாடி களிப்பதற்கு உரியது; பிற சமயத்தவர் படித்தறிந்து மகிழ ஏற்ற வகையில் உள்ளது. இந்த நுாலுக்கான தகவல் தேடலில், நுாலாசிரியரின் அரிய உழைப்பும், முயற்சியும் போற்றுதலுக்கு உரியனவாக உள்ளன.
– ராம.குருநாதன்