ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசி அருளிய அருமையான நுால். நான்கு பாகங்களும், 32 அதிகாரங்களும் கொண்டது; முதல் பாகமான இந்த நுாலில் 16 அதிகாரங்கள் விளக்கப் பட்டுள்ளன.‘குரு’ என்ற சொல்லின் விளக்கமும், ‘ஸ்ரீ’ என்ற பத விபரமும், ஆதிசேஷன் பகவானுக்குச் செய்யும் கைங்கர்யங்களின் விளக்கமும், தேசிகர் கூறும், ‘ராஜகுமார த்ருஷ்டாந்தம்’ என்ற சொற்றொடரை, ஜீவாத்மா தானும் உடலும் ஒன்றே என்ற மயக்கத்தில் இருப்பதை விளக்குவதும் சிறப்பாக உள்ளது.
அர்த்த பஞ்சக அதிகாரத்தில் முமுஷுக்கள் அறிய வேண்டிய ஐந்து தத்துவங்களை விளக்குவதும், ‘எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்’ என்ற திருப்பாவை அடியை அருமையாக விளக்குவதும் சிறப்பு.
அஷ்டமா ஸித்திகளை மிகத் தெளிவாக விளக்குவதும், நான்கு யுகங்களின் வருஷங்களை விளக்குவதும், அர்ச்சாவதாரம் பற்றி விளக்குவதும், அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் ஐந்து தோஷங்கள் பற்றி விளக்குவதும் உரையாசிரியரின் ஞானத்தை பிரமிக்க வைக்கிறது.
தேவையான இடங்களில், திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள், ராமாயணம், மகாபாரதக் கருத்துகள், விஷ்ணு புராண ஸ்லோகங்கள் கூறி விளக்குவது பெருமை சேர்க்கிறது. வைணவர்கள் தவறாது படிக்க வேண்டிய நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து