தந்தை – மகன் நட்பு, பாசம், அறிவுரை, நல்வழி காட்டுதலை உணர்த்தும், கதை நுால். சந்தர்ப்ப சூழலில் வழி தவறி சென்ற மகனை, அப்படியே விட்டுவிடாமல், தாயுள்ளத்தோடு அணுகி, அறிவுரை கூறி நல்வழிப்படுத்திய தந்தையின் பாசப் போராட்டம், நெஞ்சை உருகச் செய்கிறது. திருக்குறள், விவிலிய கருத்துகள் கதையை, உயிர்ப்புடன் நகர்த்தி செல்கின்றன.
‘சில மனிதர்கள் தவறு செய்யும்போது, மனித இயல்பை விற்று விடுகின்றனர். அப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? பொய் சாட்சிக்கு எதிராக, மனசாட்சி இருக்கும்போது, உண்மையை மறைத்து, மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்!’
‘‘வக்கீல் சார், ஒரு மனுசன் மனம் திருந்தி வாழக்கூடாது என்று இந்த சமூகம் நினைக்கிறதை நினைத்து தான் வேதனையாக இருக்கிறது...’’ இது போன்ற சமூக அவலங்களை தோல் உரிக்கும் உரையாடல்கள், கதையில் ஏராளம். குடும்ப பாசத்தை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், கதை எழுத துடிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்