யானை – மனித மோதலை பரிவுடன் ஆராய்ந்து தகவல்களைத் திரட்டித் தந்திருக்கும் நுால். யானைகளின் வாழ்விடம் மற்றும் வாழ்வியல் சார்ந்து ஏற்பட்டுள்ள இடர்களை, களையும் நோக்கில் முனைப்புடன் எழுதப்பட்டுள்ளது. இந்து தமிழ் திசை இணைய இதழில், தொடராக வெளிவந்தது. யானைகள் வாழ்வியல் குறித்து ஏற்கனவே வெளியான நுாலின் இரண்டாம் பாகமாக மலர்ந்துள்ளது.
நுாலில், ‘இளைப்பாறுதலுக்கு ஒரு வைதேகி’ எனத் துவங்கி, ‘கதி கலங்க வைக்கும் பவானிசாகர் புதைசேறு’ என்பது வரை, 30 குறுந்தலைப்புகளில் தகவல்கள் நிறைந்துள்ளன. குறுந் தலைப்புகள், வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
யானை வாழித்தடங்களில் உள்ள இடர்ப்பாடுகள், பெரிய நிறுவனங்களின் பேராசையால் ஏற்படும் தடைகள், காடு ஆக்கிரமிப்பால் வன உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், ஆதிவாசி போன்ற எளிய மனிதர்கள் படும் துயரம் என பல கோணங்களில் அலசுகிறது.
பகுதிவாரியாக மக்களிடம் திரட்டப்பட்ட தகவல்கள், தந்தவர்களின் வாய்மொழி சொற்களிலே, கொச்சை நீக்கி நயம்பட எழுதப்பட்டுள்ளது. இது சுவாரசியத்தை கூட்டுகிறது. நம்பகத் தன்மையை உறுதி செய்கிறது.
மனிதர்கள் விரும்பும் அற்புதமான உயிரினம் யானை. மானுட வளர்ச்சியில் அதன் பயன் அளவிட முடியாதது. மனிதனுடன் நெருங்கிய நட்பு பாராட்டுவதுடன், உயரிய பண்புகளையும் கற்றுத்தந்துள்ளது. புகழ் மிக்க அந்த உயிரினம், வாழ்வதற்காக நடத்தும் போராட்டத்தின் ஒரு காலக்கட்ட வரலாறாக அமைந்துள்ளது. இயற்கை மீதான பெரும் விருப்பத்தால் மலர்ந்துள்ள நுால்.
– அமுதன்