எப்படியும் வாழலாம் என்ற நிலையை மாற்றி, இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை விளக்கும் நுால். இரண்டு பாகமாக 32 தலைப்புகளில் விரிவாகப் பேசுகிறது. தலைப்புகளைப் பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது. எந்நாளும் இன்பமேயன்றி, தெய்வீகம் என்பது சேரிடம் அறிதல், இனியவை பேசும் வழி, நன்மை வழி, நாகரிக வழி, எழுந்து நட போன்ற தலைப்புகளில் எளிய தமிழ் நடையில் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளது.
திருமந்திரம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவருட்பா, தாயுமான சுவாமி முதலியோர் பாடல்களிலிருந்து, தகுந்த எடுத்துக்காட்டுகளைத் தந்து கருத்துக்களை மனதில் பதிய வைக்கிறது. ஞான நெறி விளக்கம்: இதனுள் மாயை என்பதற்கான தத்துவ விளக்கம் பயனுள்ளது. ஞானம் பெறும் மார்க்கம், தன்னை அறிதல் தவ நெறி, முக்தி நெறி என்று எளிமையாக விளக்கப் பெறுகிறது. இதிகாசங்களில் இருந்தும், ஐம்பெருங்காப்பியங்களில் இருந்தும் உதாரணம் தந்திருப்பது அருமை.
– பேராசிரியர் இரா.நாராயணன்