அன்றாட நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, அவற்றில் நகைச்சுவை மிளிரும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘எதிர் சீர்’ என துவங்கி, ‘பக்கா உதவி’ முடிய, 58 கட்டுரைகள் பல காலக்கட்டங்களில் எழுதப்பட்டுள்ளன. அந்தந்த காலத்தை நகைச்சுவை பொதிய கண்முன் காட்டும் வகையில் அமைந்துள்ளது. முதல் கட்டுரை, இதழ்களின் காணும் செய்திகளை, நகைச்சுவை மனப்பான்மையுடன் எதிர்கொண்டு, கமென்ட் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு ஒன்று...
செய்தி: பெற்றோரின் ஆயுளுக்காக, உயிருள்ள பாம்பை வைத்து சர்ப்ப பூஜை செய்த கடலுார் அர்ச்சகர் கைது.
கமென்ட்: விழாவில் மகுடிதானே மங்கள வாத்தியம்.
இதுபோல், 20 துணுக்குகள் உள்ளன. அனைத்திலும் நகைச்சுவை பொதிந்துள்ளன.
அடுத்து, இருவருக்கிடையே நடக்கும் உரையாடல் இயல்பாக நகைச்சவையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வாசிக்கும் போது வயிறு குலுங்க வைக்கிறது. பல கட்டுரைகள் செய்திகளை மூலமாகக் கொண்டு, சமூகத்தில் நடக்கும் உரையாடலாக நகைச்சுவை வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. அவை, சமூக போக்கை பிரதிபலிப்பதாகவும், சம்பவ விமர்சனங்களாகவும் அமைந்துள்ளன.
கட்டுரைகளுக்கு அமைக்கப்பட்ட தலைப்புகளும் கவரும் வகையில் உள்ளன. கிலி கிலி சங்கிலி, பதிலடி சந்திரகாந்தா, உர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்..., எசகு பிசகு, சுண்டல் சூடாமணி, பாக்கியம் செய்த ராமசாமி, பக்கத்து சீட்டில் பாலமுரளி, விரலுக்கு மை அழகு, குலுக்கு மினுக்கு சிலுக்கு, உளறல் துறை, சத்திரமும் பாத்திரமும் என பலவாறாக அமைந்து உள்ளன.
தலைப்புகளில் நகைச்சுவை பாய்வதுடன், அது எந்த சூழல் சார்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. தமிழில் நகைச்சுவை கட்டுரைகள் அமைவது மிகவும் அரிதானது. இந்த புத்தகம் அரிதில் முயன்று உருவாக்கப்பட்டுள்ளது. புத்தக ஆசிரியர், நீண்ட காலமாக நகைச்சுவை கட்டுரைகள் எழுதி வருபவர். முதலில் ஆங்கிலத்தில் துவங்கி, 80க்கு பின் தமிழிலும் எழுதி வருகிறார். சென்னை நகர வட்டார பத்திரிகைகளான ‘அண்ணாநகர் டைம்ஸ்’ மற்றும் ‘மாம்பலம் டைம்ஸ்’ இதழ்களில் எழுதி வருகிறார். எழுதியதில் ஒரு பகுதி நுாலாக்கப்பட்டுள்ளது. சிரித்துக் கொண்டே படிக்க ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால்.
– மலர்