பண்டைய கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் உள்ள பழந்தமிழரின் கணக்கியல் சிந்தனைகள் குறித்து ஆய்வு செய்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். மூன்று ஆங்கிலக் கட்டுரைகள் உட்பட, 23 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கணக்கியலில் தமிழர் அறிவுத்திறன் எப்படி இருந்தது என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. இலக்கண, இலக்கியங்கள், இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கணிதக் கூறுகள், சிற்பக்கலை, கட்டடக் கலை, கல்வெட்டுகள் ஆகியவற்றில், தமிழர்கள் கையாண்டுள்ள கணக்கியல் சிந்தனைகள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
சிந்து சமவெளியில் கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்ட செங்கல் அளவுகள், தமிழ் மரபைச் சேர்ந்தது எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பழந்தமிழர்கள் உழவுத் தொழிலை சிறப்பாக செய்து வந்த வரலாறு, அவர்கள் அத்தொழிலில் பயன்படுத்திய அளவு முறைகள் மூலமாக, நமக்குத் தெளிவாக தெரிய வருகிறது.
கோவில்கள் அமைக்கும் போது தமிழர்கள் கையாண்ட கணக்கியல், வியக்க வைக்கும் வகையில் உள்ளது. மற்ற துறையிலும் கையாண்ட கணக்கியல் சிந்தனைகள் காட்டப்பட்டுள்ளன. நீட்டல், முகத்தல், எண்ணல், எடுத்தல் போன்ற அளவுகளும், அதற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களும் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தொல்காப்பியத்தில் கணிதம், பக்தி இலக்கியமான தேவாரத்தில் கணிதம், ராமாயணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கணித சிந்தனைகள் விளக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் கணக்கியல் அறிவை தெரிந்து கொள்ள வழிகாட்டும் நுால்.
– முகில் குமரன்