வைணவம் குறித்த 19 கட்டுரைகள் இந்நுாலில் உள்ளன. ஒவ்வொன்றும், எளிய பழகு தமிழில் உள்ளது. குலசேகர ஆழ்வாரின் சில பாசுரங்களின் விளக்கமும், ஸ்ரீமந் நாதமுனிகளின் அறிமுகத்தால், கம்பர், ராமாயணத்தைத் திருவரங்கம் கோவிலில் அரங்கேற்றம் நடத்தியதும், பின்னர், ‘சடகோபர் அந்தாதி’ இயற்றிய விளக்கமும் உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் குறித்த வழக்கின் விளக்கங்களும், ஸ்ரீராமானுஜரின் 1,000 ஆண்டு கொண்டாட்டங்கள் குறித்தும் விளக்குகிறது. கூரத்தாழ்வான், மணவாள மாமுனிகள் குறித்து கட்டுரைகளில் விளக்குவதும், ராமன் வேறு கிருஷ்ணன் வேறு அல்ல என்று கூறுவதும் சிறப்புக்குரியது.
திருக்கண்ணங்குடியெனும் திவ்ய தேசத்தை, விருது வென்ற திவ்ய தேசமாக விளக்குவதும், நுாலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு எடுத்துக்காட்டு. ஆன்மிக அன்பர்கள் தவறாது படித்துப் பயன் அடையத் தக்க நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து