படிப்பு, பணி, வேலை தேடல், திருமணம் என, பெண்கள் பிறந்த வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, சந்திக்கக்கூடிய பிரச்னைகளை அலசும், 16 சிறுகதைகளின் தொகுப்பு.
ஜாதி, மதம், அரசியல், தீண்டாமைகளில் இருந்து பெண்கள் எப்படி விழிப்புடன் வீறுநடை போடவேண்டும் என விவரிக்கிறது. சாதனை படைத்த பெண்களின் சோதனை காலங்களை அலசுகிறது.
குறிப்பாக, ‘மறுவாழ்வு மலர்ந்தது’ என்ற கதையில், ரத்த புற்றுநோயால் ஆறு மாதமே உயிரோடிருக்கும் விஜில்; இதை தெரிந்தே திருமணம் செய்ய சம்மதித்த நர்ஸ் மீனா; மகன் இறந்ததும், மருமகளை மகளாக பாவித்து, மறுமணம் செய்து வைத்து தன் வீட்டிலே வைத்திருந்த மாமியார்... என விதிவிலக்கான மாமியாரின் ஈர நெஞ்சம் மனதை ஈர்க்கிறது.
அரசு பணியில் சேர்ந்த ரம்யாவின் நேர்மைக்காக, நேர்மை தவறிய சக அதிகாரிகள் எப்படியெல்லாம் பந்தாடுகின்றனர் என, ‘நேர்மையின் மறுபக்கம்’ கதை உணர வைக்கிறது. பெண்களை மையப்படுத்திய கதாபாத்திரமாக படைத்துள்ளார் நுாலாசிரியர். பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, எதிர்நீச்சல் போட துாண்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்