வாழும் காலத்தில் சாதனைகள் புரிந்த தமிழக சட்ட மேதை சந்துரு எழுதிய சுயசரிதை நுால். சமூக அக்கறை மிக்க செயல்பாட்டாளராக, வழக்கறிஞராக, நீதிபதியாக ஆற்றிய பன்முகச் சேவைப் பணிகளின் தொகுப்பாக மலர்ந்து உள்ளது.
தமிழ் சமூகத்தில் ஒரு காலகட்ட வலியையும், அதற்கான மாற்றத்தை தேடியபோது ஏற்பட்ட அனுபவத்தையும், 22 கட்டுரைகளில் தருகிறது. நெகிழ்வை உள்ளீடாக கொண்டு உள்ளது. சுய புராணத்தை முன் வைக்கவில்லை இந்த நுால்; சமூகத்தில் கற்றதை, அனுபவமாக பெற்றதை வளர்ச்சி செயல்பாட்டுக்கு பயன்படுத்திய முறைமையை சுய தரிசனமாக வெளிப்படுத்துகிறது.
சட்டம், நீதித்துறை, அரசு இயந்திர செயல்பாட்டில் மலிந்துள்ள குறைகளை உள்வாங்கி, மாற்றத்துக்கு வழித்தடம் போட முயல்கிறது. நிர்வாகம், நீதி பரிபாலன சிக்கல்களை உணர்ந்து தெளிந்து தனியாகவும், குழுவுடன் சேர்ந்தும் மாற்றியமைத்த அனுபவத்தை பேசுகிறது. வளர்ச்சி செயல்பாட்டை பாடமாக வகுக்கிறது. போராட்டமாக, முறையீடாக, உத்தரவாக சீரான வளர்ச்சி செயலை முன்னிலைப்படுத்துகிறது.
விளிம்பு நிலை மற்றும் இயலாமல் வாடியோருக்காக பரிந்த உணர்வு, புத்தகமாக மிளிர்கிறது. முரண் களைந்து வளர்ச்சிக்கு கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பால் உணர்த்துகிறது. விளிம்பில் தேங்கியுள்ள மக்களுக்காக ஒலிக்கும் இந்த குரலில், மிகையோ இயல்பு மாற்றமோ இருப்பதாக தெரியவில்லை.
எளிமை, நம்பிக்கை, தீர்க்கம், வளைந்து கொடுக்காமை, வளர்ச்சிக்கான தொலைநோக்கிய பார்வை போன்றவை நுால் முழுதும் தடயங்களாக காண முடிகிறது. முன்மாதிரியாக வாழ்வதற்கான வழிமுறையை, அதனால் ஏற்படும் சுய திருப்தியை படம்பிடிக்கிறது.
வாழுதல் அமைந்து வருவதல்ல; அமைத்துக் கொள்ளுதல் என்ற உயர்ந்த நெறியை பரப்புகிறது. நெறியுடன் வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. அன்பு, கருணை, மனிதநேயம், வளர்ச்சி போன்றவை சொற்களாக அமையாமல், வாழ்வாக, செயலாக, தீர்ப்புகளாக, துாண்டுகோலாக மலர்ந்துள்ளன.
முற்றிலும் வேறுபாடுள்ள முரண் அமைப்பு கொண்ட தமிழ் சமுதாயத்தில், மக்களாட்சிக்கான பாதையை செம்மையாக்கி விரிவுபடுத்த உதவும் பாடத்தை கற்பிக்கும் நுால்.
– அமுதன்