வடமொழியில் யோகவாசிட்டம் என்ற மூல நுாலைத் தமிழில் மொழிபெயர்த்து, வீரை.ஆளவந்தார் அருளிய 2,055 பாடல்களுக்கு மூலத்துடன் உரை வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு விருத்தங்களில் எழுதப்பட்டுள்ள பாடல்களை எளிய வாசிப்புக்காக சீர் பிரித்து பொழிப்புரையும் தந்திருப்பது சிறப்பு.
ஞான வாசிட்டத்திற்குப் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும், இன்றைய வேதாந்த மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொள்வதற்காகவே படைக்கப்பட்டுள்ளது.
பாடல்களில் உள்ள கதைகளின் தன்மைகள் பாயிரத்தில் தெளிவாக பாடப்பட்டுள்ளன. பாயிரம் துவங்கி, வைராக்கியம், முமூட்சு, உற்பத்தி, திதி, உபசாந்தி, நிருவாணம் எனும் ஆறு தலைப்புகளில் கதைகளாகப் பாடப்பட்ட பாடல்களில், திடமான அனுபவ ஞானத்தை அடையும் மார்க்கம் வசிட்டருக்கும், ராமருக்குமான வினா – விடை வடிவில் சொல்லிச் செல்லப்படுகின்றன.
மனதை நேரிய பாதையில் செலுத்தும் அறநெறிகள் கொண்ட நுாலின் பிற்சேர்க்கையாக ஞான வாசிட்டப் பாடல்களின் அகர வரிசை பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு