கதை வடிவில் பாய்ந்து ஓடும் ராமாயண நதியின் அழகை கம்பன்,வால்மீகி இரு கரைகளில் நின்று ரசிக்க வைக்கும் நுால். காளிதாசனின் ரகுவம்சத்தையும் சேர்த்து, ராமாயணக் கதைக்கு முப்பரிமாணக் காட்சிகள் தருவதில் முத்திரை பதிக்கிறது.
தங்க நகையில் வைரம் பதித்தது போல, கம்பன் பாடல்களை நடுவே கோர்த்துக் கொடுத்துள்ளது அருமை. வை.மு.கோ., போன்ற உரையாசிரியர்கள் கருத்தும் ஒப்பிடப்பட்டுள்ளது. நளினமும், நகைச்சுவையும் உற்சாகம் தருகிறது. வால்மீகி, கம்பர் பற்றிய அறிமுகம், மூல நுாலில் இருந்து கம்பர் மாறுபடும் இடங்கள், அதற்கான காரணங்கள் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.
இட்சுவாகு வம்சத்தில், சூரிய குலத்தில் 34ம் அரசன் தசரதன். இவன் மகன் ராமனை மனிதனாகவே வால்மீகி காட்டினான். கம்பன் தெய்வமாகப் போற்றினான். கோசல நாட்டு பெண்கள் கல்வி, செல்வம், விருந்தோம்பல் உடையவர்கள் என்று கம்பன் பாடலையும் தந்து, கருத்தையும் தருவது சிறப்பு சேர்க்கிறது.
அவசரத்தில் வாக்குறுதி தந்து, பின் தடுமாறுவதில், தேர்தல் காலத்து அரசியல்வாதி ஆகிவிட்டான் தசரதன் என்ற ஒப்புமை அற்புதம்.
– முனைவர் மா.கி.ரமணன்