ராமாயணக் கதையை புரியும் வகையில் விளக்கும் நுால். ஆரண்யா, கிஷ்கிந்தா காண்டங்கள் கானகத்திலும், மலைப்பகுதியிலும் நடப்பவை. அவை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
சரபங்கர், அகத்தியர் முனிவர் சந்திப்பு, கோதாவரி நதியழகு, சூர்ப்பனகை மூக்கறுப்பு, கோபம், ராவணனை சீதையிடம் மோகம் கொள்ள வைத்தல், நளவெண்பாவில் தமயந்தி புறா கேட்டதை, சீதை மான் பிடித்துத் தர கேட்டதோடு ஒப்பிடுவது, மான் உருக்கொண்ட மாரீசன் செயல், ராவணன் துாக்கிச் சென்றவிதம் போன்ற செய்திகள் வால்மீகி, கம்பர் காவிய நோக்கில் விளக்கம் பெற்றுள்ளன.
சீதையைக் காண முடியாத ஒரே காண்டம் கிஷ்கிந்தா. மற்ற ஐந்திலும் அவர் இல்லாமல் கதை நகராது என்பது போன்ற சுவையான தகவல்கள் உள்ளன. அனுமன், வாலி, சுக்ரீவன் ஆளுமை வருணனைகள், ராமன் மறைந்திருந்து வாலியை வதம் செய்தது நீதியா என்ற வாதங்கள், மது போதையால் அழிந்த சுக்ரீவன் பிழை போன்றவை நல்ல படிப்பினை தரும்.
– முனைவர் மா.கி.ரமணன்