ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின் வரலாறு மற்றும் பொருளியல் பின்னணியுடன், வளர்ச்சி நோக்கில் எழுதப்பட்டுள்ள பயண அனுபவ படைப்புகளின் தொகுப்பு நுால். தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக வெளியான பேட்டி, கட்டுரைகளை உள்ளடக்கியது. பத்திரிகையாளரின் கூர்நோக்கு பார்வை எங்கும் வெளிப்பட்டுள்ளது.
புத்தகத்தில், 15 தலைப்புகளில் படைப்புகள் உள்ளன. அவை அனுபவ வெளிப்பாடாகவும், திரட்டிய தகவல் தொகுப்பாகவும், பேட்டியாகவும் மிளிர்கின்றன. இங்கிலாந்தின் இயக்கத்தை, உலகம் தழுவிய பார்வையில் வெளிப்படுத்துகிறது. முக்கியமாக, கிராமப்புற அமைப்பும், இயக்க முறையும் திட்டமிட்ட வளர்ச்சியை துாண்ட உதவும்.
வளரும் நாடான இந்தியாவுக்கு, வளர்ந்த நாட்டில் பெற வேண்டிய தகவல்களை இயல்பாக தருகிறது. லண்டன் நகர இயக்கத்தை, ஒரு வளர்ந்த கிராமிய மனநிலையில் கணித்து வெளிப்படுத்துகிறது. முக்கியமாக, ‘பெயரிலி’ என்ற யாசக பெண்ணிடம் பெற்ற பதில் உலகின் மனசாட்சியாக வெளிப்படுகிறது. விரிந்த உலகை அடக்கி ஆண்ட பகுதியின் உயிர்மூச்சின் வேகத்தை திறந்து காட்டும் நுால்.
– அமுதன்