பல நாடுகளில் பயணம் செய்த அனுபவத்தை கண்முன் காட்டும் நுால். வழவழப்பான தாளில் கண் கவரும் வண்ணப்படங்களோடு வெளிவந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, கட்டடக்கலை, நுண்கலை, பண்பாடு, நாகரிகம், தகவல் தொடர்பு போன்றவற்றில் சிறு நாடுகளின் முன்னேற்றத்தையும் பதிவு செய்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலங்கள் பற்றிய வருணனை, நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அயல் நாடுகளில் மருத்துவம், பொறியியல், அறிவியல், மொழி கல்வி முறையில் நிலவும் மாறுபட்ட சூழல்களை தருகிறது. ஆர்வத்தைத் துாண்டும் விறுவிறு நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
உரையாடல்களில் நகைச்சுவை உணர்வு மேலோங்கியுள்ளது. கல்வியாளர், அரசியல் விமர்சகர், எழுத்தாளர், பொருளாதார நிபுணர், ஆன்மிகவாதி எனப் பன்முகம் கொண்ட ஒருவரின் படைப்பு என்பதால், தகவல்கள் முறையாக பின்னப்பட்டு பொது அறிவுக் களஞ்சியமாக விளங்குகிறது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு