ஸ்ரீமத் பகவத் கீதையில் அர்ஜுன விஷாத யோகம் முதல், மோக்ஷ சன்னியாச யோகம் வரையிலான அத்தியாயங்களுக்கு சுருக்க வடிவில் எளிய நடையில் உரை தரும் நுால். அர்ஜுனன் வினவுவது போலவும், பகவான் விடை அளிப்பது போலவும் உரையாடல் வடிவில் எளிதில் விளங்கும் வண்ணம் படைத்துள்ளார் பாரதியார்.
மனதில் எவ்வித சஞ்சலமேனும், சலிப்பேனும், பயமேனும் இன்றி ஆழ்ந்து லயப்படுத்தி கவனிக்கும் பயிற்சி பற்றி விரிவாக தருகிறது. எவன் எல்லா பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லா பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சி உடையான் ஆவான். எல்லா செயல்களையும் கடவுளுக்கு சமர்ப்பித்து, பற்றுதல் நீக்கி தொழில் செய்பவனை பாவம் தீண்டுவதில்லை.
சரீரம் நீங்கும் முன் இவ்வுலகத்தில் விருப்பத்தாலும், சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அவனே யோகி. அவனே இன்பம் உடையோன் என்பன போன்ற கவித்துவமான உரையை தந்துள்ளார் பாரதியார். ஆன்ம ஈடேற்றத்திற்கான அமிழ்தமாக உள்ளது கீதை விளக்கம்.
– புலவர் சு.மதியழகன்