ஆயுதம் ஏந்தாமல், மன உறுதியுடன் சாத்வீகமாக போராடுவது தான் உண்மையான வீரம் என உணர்த்த, காந்தி வாழ்க்கை சம்பவங்களை உதாரணமாக கூறும் நுால். இன்றைய உலகின் குறைபாடுகளை அன்றே மகாத்மா சொன்னதை குறிப்பிடுகிறது.
தென் ஆப்ரிக்காவில் வெள்ளை போலீஸ், எட்டி உதைத்த செயலுக்கு நீதி கிடைக்கும் என தெரிந்தும், சொந்த விஷயத்திற்காக நீதிமன்றம் செல்லக்கூடாது என, போலீசை மன்னிக்கிறார் காந்தி.
நிருபரிடம், ‘வெற்றி பெற, போர்க்களத்தில் சண்டையிட தேவையில்லை’ என்கிறார். வாழ்வில் அஹிம்சை மட்டும் தான் மன அமைதியை தரும் என உணர்த்துகிறார். காந்தி தமிழில் கையெழுத்திட்ட ஆவணத்தை பொக்கிஷமாக பராமரிக்கிறது, நாகர்கோவில், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம்., பள்ளி.
திருச்செங்கோட்டில் சுற்றுப் பயணம் செய்த போது, மூன்றாவது முறை இளநீர் கொடுத்தவரிடம், ‘அளவுக்கு மேல் சேமிப்பவன் மட்டுமில்லை; சாப்பிடுபவனும் திருடன்’ என அறிவுரைத்துள்ளார் காந்தி.
ஆங்கிலேயர் கொடுத்த சிகரெட்டை, மற்றொரு நாள் அவருக்கே திருப்பிக் கொடுக்கிறார். ஜம்னாலால் பஜாஜ் தனக்கு சொந்தமான கிராமத்தை காந்தி பெயரில் எழுதியது, பின்னாளில் அது சேவா கிராமமாக உருவானது போன்ற சுவையான சம்பவங்கள் நிறைந்துள்ள நுால்.
–
டி.எஸ்.ராயன்