தலையாலங்கானம் என்ற இடத்தில் போரிட்டு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைச் சுற்றிக் கற்பனையில் புனையப்பட்ட புதினம். தந்தையின் மரணத்தால், 16 வயதிலேயே பாண்டிய
மன்னனாக முடிசூடி, தன்னை ஏளனம் செய்த சேர, சோழ மன்னர்களையும், வேளிர் ஐவரையும் போர்க்களத்தில் வென்றவன் செழியன். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் என்ற அடைமொழி பெற்ற செழியனை கதைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எண்ணற்ற வரலாற்றுத் தகவல்களைத் தருகிறது.
பெருந்தேவன் படைச்சாலையில் நெடுஞ்செழியன் பயிற்சி செய்வது, அரசவையில் நெடுஞ்செழியன் முடிசூட்டலில் கலந்து கொண்டு சேர, சோழ மன்னர்கள் புலவர் மருதனோடு உரையாடுவது போன்றவை நேரில் நடப்பது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன.
முற்காலத்தில் நிலவிய மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை, உட்பகை, போர் மறம், துரோகம், வஞ்சகம், தந்திரம், வேவு பார்த்தல் என அனைத்தையும் உள்வாங்கி எழுதப்பட்டு உள்ளது. கற்பனையில் உருவாக்கப்பட்டது என நினைவில் கொண்டு படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு