தமிழ் சிற்றிலக்கியங்களில் துாது இலக்கியம் பற்றிய சிறப்பு நுால். மனிதர்கள், நாரை, கிளி, அன்னம், தமிழ் என பலவாறாக துாதுக்கள் குறித்த தகவல்கள் உள்ளன. தமிழ் காப்பியங்களில் துாது சென்ற துாதுவர்கள் குறித்து செய்திகள் உள்ளன. போர்ச் செய்திகளை அறிவிக்கவும், காதலுக்காகவும் துாது சென்ற நிகழ்வுகள் ஏராளமாக நடந்துள்ளதை உதாரணங்களுடன் காட்டுகிறது.
துாது இலக்கியத்திற்கான அறிமுகம் நுாலில் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது. துாது குறித்து திருக்குறள் கூறியுள்ள செய்திகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சுந்தரருக்காக துாது சென்ற இறைவன் சிவபெருமான், அதியமான் நெடுமான் அஞ்சிக்காக எதிரி நாட்டு மன்னனிடம் துாது சென்ற அவ்வையார் போன்ற செய்திகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோவலன் – கண்ணகி பிரிந்த பின், அவர்களுக்காக துாது சென்ற வயந்தமாலை குறித்தும் கூறப்பட்டுள்ளது. ராமனுக்காக, ராவணனிடம் துாது சென்ற அனுமன், மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக, கவுரவர்களிடம் துாது சென்ற கிருஷ்ணன் பற்றியும் பேசப்பட்டுள்ளது.
புராணத்தில் வீரபாகுவை துாது அனுப்பிய முருகப் பெருமான், நளனுக்காக துாது சென்ற அன்னப்பறவை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
– முகில் குமரன்