மலைவாழ் மக்கள் வாழ்க்கை குறித்து ஆய்வு பார்வையில் எழுதப்பட்டுள்ள நுால். ஐந்து தலைப்புகளில், ஏலகிரி மக்கள் இயல்பு, தொழில், வாழ்வியல் பற்றிய விபரங்கள் உள்ளன. தொன்ம கதைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
முதல் பகுதியில் ஏலகிரி மலை இயற்கை அமைப்பு, நீர்நிலைகள், மலை ஊர்கள், கல்வி நிலையங்கள், சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. இரண்டாம் இயலில் திருமண முறை, பிறப்பு, இறப்பு சடங்குகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
மூன்றாம் இயலில், மக்களின் தொன்ம கதைகள் தொடர்பாக செய்திகள் கூறப்பட்டுள்ளன. பெருந்தெய்வங்கள், ராமாயண, மகாபாரத தொன்ம கதைகள், சிறுதெய்வம் குறித்த தொன்ம கதைகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. பேய்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.
ஏலகிரி மலையின் தொல்லியல் தடயம் குறித்து, நான்காம் இயலில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. புதிய கற்கால சான்றுகள், சங்க கால நடுகல் வழிபாடு, பல்லவர் கால நடுகற்கள், சோழர் காலம் குறித்த செய்திகள் உள்ளன.
இறுதி இயலில் ஏலகிரி மலை வாழ் மக்களின் புழங்கு பொருட்கள் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. வீடு அமைப்பு, துடைப்பம், களி உருட்டி, கரண்டி, முறம், கூடை, தானிய அளவீடு கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் படத்துடன் காட்டப்பட்டுள்ளன. தகவல்களுக்கு ஏற்ப படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏலகிரி மலைவாழ் மக்கள் பண்பாட்டை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– முகில் குமரன்