கோபுரம் போல் உயர்ந்து வண்ண ஜாலம் காட்டுகிறது கோபுர தரிசனம் தீபாவளி மலர். ஆன்மிக கட்டுரைகள், கோவில் தரிசனம், கதை, கவிதை, வண்ணப் படங்கள் பொது கட்டுரைகள், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றிய குறிப்புரைகள் என சுவாரசியம் தருகிறது. பிரபல எழுத்தாளர்கள் பலரின் கைவண்ணத்தில் மிளிர்கிறது.
காஞ்சி மகா சுவாமிகளின் தெய்வ ஸாக்ஷி என்ற தலைப்பிலமைந்த அருளுரை, அவரது வண்ணப்படத்துடன் முத்தாய்ப்பாக உள்ளது. அருளுரைக்கு பொருத்தமான வரைபடங்களும் மிக இயல்பாக உள்ளன. அன்னதானம் அதுவே பிரதானம் என்ற தலைப்பில் சிறப்பு கட்டுரை ஒன்று இடம் பெற்றுள்ளது. அன்னதானம் பற்றிய அரிய செய்திகளை கொண்டுள்ளது.
பிரபல எழுத்தாளர் கல்கி பற்றி, எழுத்தாளர் சாவி எழுதிய கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. ஆசை கொடுக்கும் அவமானம் என்ற தலைப்பில், சுகி சிவம் எழுதியுள்ள அறிவூட்டும் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.
தீபாவளியின் பெருமைபற்றிய கட்டுரை எல்லாம் சுவாரசியம் தருகின்றன. பிரபல எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் எழுதிய கட்டுரை, புதிதாக எழுத வருவோருக்கு நம்பிக்கையூட்டும். மறைந்த எழுத்தாளர் ராஜநாராயணன் எழுதிய சிறுகதை ஒன்றும் இடம் பெற்றுள்ளது. தங்க சுரங்கமாக மலர்ந்துள்ளது, கோபுரதரிசனம் தீபாவளி மலர்.
– ராம்