சர்க்கரை நோயை தக்க நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், உடல் உள்ளுறுப்புகளை பாதிக்கும். குறிப்பாக, கண், மூளை, இதயம், சிறுநீரகம் செயலிழந்து மரணம் ஏற்படும். இது குறித்து விளக்கமாக எழுதப்பட்டுள்ள புத்தகம்.
பேராசிரியர் அர்த்தநாரியின், 50 ஆண்டு கால மருத்துவப் பணி அனுபவத்தில் ஆய்வு செய்து இரண்டு பாகங்களாக எழுதப்பட்டு உள்ளது. முதலில் சர்க்கரை வியாதியின் அடிப்படை, சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக உள்ளது.
சர்க்கரை வியாதியின் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் விளைவை தடுக்கும் மருந்து, மாத்திரை மற்றும் ஊசிகள் பற்றி விளக்கமாக தரப்பட்டுள்ளது. இன்சுலின் பிரிவுகள், வகைகள் மற்றும் நோயாளிக்கு தர வேண்டிய அளவு விளக்கப்பட்டுள்ளது. இன்சுலின் என்றாலே பயப்படுவோருக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.
இரண்டாம் பாகத்தில் சர்க்கரை நோயால் வரும் இதய பாதிப்பு, சிறுநீரக நோய், நரம்பு மண்டல நோய், கண் பாதிப்பு, கால்களில் புண், காலில் ரத்தக்குழாய் அடைப்பு பற்றி விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘ஏஞ்சைனா’ என்ற மார்பு வலி, மாரடைப்பு, ரத்தம் உறையும் தன்மையால் அது கொழுப்பு கட்டியாக மாறுதல், திரம்போசிஸ் உருவாதல், அதை தடுக்கும் வழிமுறைகளை தெளிவாக கூறியுள்ளார் ஆசிரியர்.
மாரடைப்பு ஏற்பட்டால், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக் மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல் மற்றும் பைபாஸ் சிகிச்சை தேவைக்கு ஏற்ப செய்ய வேண்டியது குறித்தும் விளக்கி உள்ளார். சிறுநீரக செயலிழப்புக்காண காரணங்களையும், அவற்றை அறிகுறியால் அறிந்து, பரிசோதித்து தடுப்பது பற்றியும் கூறியுள்ளார். உடல் பருமன், உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு, யோகா மற்றும் உணவு கலோரி விபரங்களையும் தெளிவாக்கியுள்ளார்.
சர்க்கரை நோயாளி, மருத்துவ மாணவர், செவிலியர், மருத்துவ களப்பணியாளர் மற்றும் சாதாரண மக்களும் புரியும்படி எழுதப்பட்டு உள்ளது. அரசு செயல்படுத்தி வரும், ‘தாய் மொழியில் மருத்துவம்’ என்ற கொள்கைக்கு உகந்த பொக்கிஷமாக இந்த நுால் திகழும் என்பதில் ஐயமில்லை.
–
டாக்டர் எம்.எஸ்.ரவி,
இதய நோய் நிபுணர்,
சென்னை மருத்துவக் கல்லுாரி