இன்றைக்கு திரும்பிய பக்கம் எல்லாம், 18 வயது நிறையாத பதின்பருவ பெண் குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு ஆளாவதையும், சம்பந்தப்பட்டவர்கள், ‘போக்சோ’ சட்டத்தில் கைதாவதையும் பார்த்து, படித்து திகைத்துப் போய்க் கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதெல்லாம் இந்த இன்டர்நெட் யுகத்தில் நடக்கத் தான் செய்யும்;பெற்றோர் தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று, 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுத்து, அந்துமணி தன் பா.கே.ப.,வில் எழுதியுள்ளார்.
@subtitle@ ‘குட் டச், பேட் டச்’@@subtitle@@
‘எந்த உறுப்பும் மர்ம உறுப்பு கிடையாது; எல்லா உறுப்புகள் பற்றியும் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். சொந்த மாமா, சித்தப்பாவாக இருந்தாலும், எல்லை மீற அனுமதிக்காதீர்கள். ‘குட் டச், பேட் டச்’ பாடத்தை முதலில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இந்தியாவில் மட்டும் இந்த சி.எஸ்.ஏ., – சைல்டு செக்ஸ் அபுயுஸ் என்ற கொடுமையின் கீழ், 20 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்...’ என்று ஆரம்பித்து, பெற்றோருக்கு ஒரு விழிப்புணர்வு பிரசாரமே செய்துள்ளார் அந்துமணி.
அந்துமணியின் அட்வைஸ்கள் அன்றைய தேதியை விட, இன்றைய காலகட்டத்துக்கு மிக அவசிய தேவையாகவே உள்ளன. அப்போது படிக்காவிட்டாலும், இப்போதாவது இந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடம் படிக்க கொடுத்து விழிப்புணர்வு அடையச் செய்யுங்கள்.
செல்லுார் சுந்தரம் என்றொரு எம்.ஜி. ஆர்., ரசிகர், எம்.ஜி.ஆர்., படம் வெளிவரும் போதெல்லாம், அந்த படத்தில் எம்.ஜி.ஆர்., என்ன கெட்டப்பில் இருந்தாரோ, அந்த கெட்டப்பை தன் உடம்பில் பச்சை குத்திக் கொள்வது இவரது வழக்கம்.
@subtitle@ பலத்த வரவேற்பு @@subtitle@@
இவரைப் பற்றி கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., இவரை நேரில் வரவழைத்து, ‘உனக்கு என்ன வேண்டும் கேள்?’ என்று கேட்டபோது, ‘உங்கள் ரசிகன் என்ற அந்த ஒன்றே போதும்...’ என்று சொன்னவர், இவரைப் பற்றிய தகவலை தேடிப் பிடித்து படத்துடன் வெளியிட்டுள்ளார் அந்துமணி.
பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள், எப்படி எல்லாம் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என்பது பற்றிய அந்துமணியின் கடிதத்திற்கு, அடுத்த அடுத்த வாரங்களில் பெண் வாசகர்களிடம் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
பள்ளியில் மட்டுமல்ல; கல்லுாரியில், வேலை பார்க்கும் இடங்களில் என்று எப்படியெல்லாம் பெண்களுக்கு தொல்லைகள் வந்தன, வருகின்றன என்பதையும், அதில் இருந்து எப்படி தப்பினோம் என்பதையும் பல வாசகியர் எழுதியுள்ளனர்.
‘பல காலமாக, நாங்கள் எங்கள் மனதில் பூட்டி வைத்திருந்த விஷயம் இது... எங்கே கொண்டு போய் எங்கள்மனச்சுமையை இறக்கி வைப்பது என்று காத்திருந்தோம். இப்போது தான், அதற்கு களமும், காலமும் கிடைத்துள்ளது...’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வாசகியர் எழுதிய விஷயங்கள், பலருக்கும் விழிப்புணர்வை தரவேண்டும்; அதே நேரம் எழுதிய வாசகியருக்கு எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என்று யோசித்து, மிக அருமையாக இத்தகைய விஷயங்களை அந்துமணி கையாண்டு புத்தகத்தில் தொகுத்துள்ளார். பார்த்து, படித்து, பாதுகாக்க வேண்டி தகவல்கள் அவை!
@subtitle@ படிக்கும் போதே கண்ணீர் வருகிறது@@subtitle@@
வாசகியர் மட்டுமல்ல; வாசகர்கள் பலரும் இதுபோல தங்கள் சுமைகளை இறக்கியுள்ளனர். சிறுவயதிலேயே மரைன் ஆபீசராக இருந்து, நல்ல சம்பளம் வாங்கிய நான், எப்படி குடிக்கு அடிமையாகி, வேலையையும், மதிப்பையும் இழந்த தன் வரலாறைச் சொல்லி, ‘குடியின் பக்கமே யாரும் போய் விடாதீர்கள்...’ என்று உருக்கமாக தெரிவிக்கிறார், ஒரு வாசகர். படிக்கும் போதே கண்ணீர் வருகிறது.
வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ள அந்துமணி, தான் படித்த குறுக்குத்துறை என்ற புத்தகத்தை பற்றி தந்துள்ள குறிப்புகளை படித்து, சிரிக்காமல் இருக்க முடியாது.
அதே போல அன்றாட உடற்பயிற்சி குறித்த கட்டுரையை, ‘சீரியஸ் சப்ஜெக்ட்’ என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால், கண்ணில் நீர் வரும் வரை சிரிப்பு தொற்றிக் கொள்கிறது.
@subtitle@ நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது@@subtitle@@
அந்துமணிக்கு கார் முதல், துடுப்பு படகு வரை மிக லாவகமாக இயக்குவார்; திடீரென்று, அவருக்கு குதிரை ஓட்டவேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது. அந்த அனுபவங்களை, நகைச்சுவையாக தந்துள்ளார். அதைப் படித்து விட்டு குதிரை ஓட்டப்போவது மேல்! ஆவியுடன் பேசிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த இவரது நண்பர் ஒருவரின் அனுபவமும் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது!
சென்னையில் இருப்பவர்கள் எத்திராஜ் மகளிர் கல்லுாரியை பலமுறை கடந்து சென்றிருப்பர்; ஆனால், யார் இந்த எத்திராஜ் என்பது பற்றி எப்போதாவது விசாரித்திருப்பரே என்றால், இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.
அந்த கல்லுாரியில் மகள்களை சேர்த்த அப்பாக்கள் கூட, இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்துமணி விலாவாரியாக விசாரித்து, வழக்கறிஞரான அவரைப் பற்றி படத்துடன் எழுதியுள்ளார். அவர் மீது மட்டுமல்ல; இப்போது, அந்த கல்லுாரியை கடந்து செல்லும் போது, அந்த கல்லுாரியின் மீதே பெருமை எழுகிறது.
@subtitle@ சுவாரசியமாக இருக்கிறது@@subtitle@@
வீட்டில், மீன் குஞ்சு வளர்ப்பது எப்படி என்றும், ரோலக்ஸ் வாட்ச்சின் மகத்துவம், ஐஸ்கிரீம் வந்த விதம், கேரளாவின் பிரபலமான ‘ஒட்டந்துள்ளல்’ நடனம், ருத்ராட்சம், உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் கார்ஷ், காந்தி குல்லா உருவான விதம் என்று நிறைய நிறைய தகவல்கள் தந்துள்ளார்; படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
எளிமையான வாழ்க்கையே, இனிமையான வாழ்க்கை என்று எப்போதும் சொல்லக் கூடிய அந்துமணி, தன் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலரது வாழ்க்கையை சொல்லியுள்ளார்; படிக்கும் போது, ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலாகுமா?’ என்று பாடத் தோன்றுகிறது.
எப்போதுமே, அந்தந்த வாரத்திற்கான மேட்டரை, அந்தந்த வாரத்திலேயே முடித்துக் கொள்ளும் அந்துமணி, கோபாலகிருஷ்ணன் என்ற மாற்றுப் பெயருடன் இடம் பெற்றுள்ள இளைஞரின் காதல் கதையை, பெற்றோர் விழிப்புணர்வு பெறவேண்டி, நான்கு வாரத்திற்கு ஒரு தொடர் போல எழுதியுள்ளார்.
@subtitle@ தகவல்களும் பயனுள்ளவை@@subtitle@@
இந்த தொடர் வந்த போது, மீதத்தை அடுத்த வாரம் சொல்கிறேன் என்று சொல்லியிருப்பார்; அடுத்த வாரம் என்னவாக இருக்கும் என்று, ‘வாரமலர்’ படித்த வாசகர்கள், ஒரு வார காலம் விடை தெரியாமல் காத்திருந்தனர். இந்த புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு, அந்த திக் திக் காத்திருப்பு தேவைப்படாது; காரணம், ஒரே மூச்சில் நான்கு வார தொடரையும் படித்து விடலாம் பாருங்கள்!
இந்த புத்தகத்திற்கான விஷயங்கள் எழுதும் போதே, சில நாடுகளுக்கு போய் வந்திருக்கிறார்; அவற்றில், நார்வே நாடும் ஒன்று. அந்த நாடு பற்றிய விவரிப்பும், தகவல்களும் பயனுள்ளவையாகும்!
மீண்டும் கோவிட், அதிகரிக்கும் உஷ்ணம் என்று பயமுறுத்தும் செய்திகளுக்கு நடுவே, நம்மை சந்தோஷத்துடனும், நம்பிக்கையுடனும் வைத்திருக்கும் விதத்தில், கோடை மழையாக அந்துமணியின் பார்த்தது, கேட்டது, படித்தது – 14ம் பாகம் இப்போது புத்தகமாக வந்துள்ளது; வாசித்து பயன் பெறுங்கள்!
– எல்.முருகராஜ்