அடி மேல் அடி என சோதனைகள் துரத்தும். பட்ட காலிலேயே திரும்பத் திரும்ப படுபவரிடம், ‘சனீஸ்வரன் என்ன பாடு படுத்துகிறான், ஒருவேளை ராகு சரியில்லையோ...’ என்பர். காலை நாளிதழில் அநேகமாக பலரும் பார்ப்பது, அன்றைய ராசி பலனைத் தான். இன்றைக்காவது கிரகம் சரியாக இருக்குமா என்பது தான் எதிர்பார்ப்பு.
சரி... கிரகங்களின் போக்கை அனுசரித்து வெல்ல முடியுமா... தசரதர் சனீஸ்வரரையே வென்றாராமே... நாட்டுக்கு பஞ்சம் வர இருந்த வேளையில், சனியை நாட்டின் பக்கமே வர விடாமல், தேரை எடுத்துக் கொண்டு படையெடுத்து சென்றுவிட்டார். சனீஸ்வரரை நேரில் சந்தித்து ஸ்தோத்திரங்களால் துதித்தார்.
அவரது கடமை உணர்வும், மக்கள் மீதான அன்பும் சனீஸ்வரரை மிகவும் கவர்ந்துவிட்டன. ‘மக்கள் எப்படி போனால் என்ன... நமக்கு வரி வசூல் ஆனால் சரி தான்’ என தசரதர் நினைத்திருந்தால், அந்த நாடு வரலாற்றில் இடம் பெற்றிருக்காது. சனீஸ்வரர் தசரதரையும் சேர்த்து பாடாய் படுத்தியிருப்பார். ஆனால், கடமை உணர்வுள்ள அவரை சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்துப் போக, தோஷமே நீங்கிவிட்டது.
அதாவது, தசரதர் ஸ்தோத்திரத்தால் சனீஸ்வரரை மகிழ்ச்சிப்படுத்தி விட்டார்; கடமையிலும் கண்ணாய் இருந்தார். இது தான் நவக்கிரகங்களை மகிழ்விக்கும் சரியான பரிகாரம். படிப்பு வரவில்லை... புதன் நல்ல கட்டத்தில் இல்லையோ என ஜாதகம் பார்த்து புலம்புவதால் பயனில்லை. படிக்கவும் வேண்டும்; பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.
இந்த புத்தகத்தில், நவக்கிரகங்கள் தரும் துன்பங்களிலிருந்து மீள பரிகாரங்களை சொல்லியுள்ளார். கட்டம் கட்டமாகப் பிரித்து, கிரகங்கள் பற்றிய விபரங்களை புரியும்படி சொல்லியுள்ளார்.
ஆயுள் விருத்தி தரும் தலங்கள், திருமணத் தடை அகற்றும் தலங்கள், நடராஜர் பெருமை உள்ளிட்டவையும் நுாலில் உள்ளன.
– தி.செல்லப்பா