ராமாயணத்தின் முக்கிய பகுதிகள் ஆரண்யம் மற்றும் கிஷ்கிந்தா காண்டங்கள். சீதையுடன் ராமன் காட்டுக்குள் நுழைவது ஆரண்ய காண்டம்; அவளை தொலைத்து விட்டு, ராமன் அலையும் காட்சிகள், சுக்ரீவனையும், அனுமனையும் சந்திக்கும் காட்சிகள், வானரர்கள் அவனுக்கு உதவும் கட்டங்கள் என மிகுந்த விறுவிறுப்பை கூட்டும்.
இதை எத்தனையோ ஆசிரியர்கள் சுவைபட கூறியுள்ளனர். ராமாயணப் பதிப்புகள் பலவற்றைப் பார்த்தால், ஒன்று வால்மீகி பக்கம் அல்லது கம்பன் பக்கம் என ஆசிரியர்கள் போயிருப்பர். ஆனால், இந்த நுாலில் இருவரையும் கலந்தாலோசித்திருக்கிறார் கதாசிரியர்.
முதலில் வால்மீகி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சுவைபட சொல்வார்; அடுத்து கம்பன் பக்கம் சுவாசிப்பார். இரண்டிலும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன என்று காட்டுவது தான் இந்த நுாலின் நோக்கம்.
அது மட்டுமல்ல, வாலியை ராமன் கொன்ற முறை சரிதானா என்று எல்லாரையும் போல யோசித்திருக்கிறார். ஆனால், சற்று வித்தியாசமாக இது படுகிறது. வாலியின் பலத்துடன், எத்தனை மடங்கு எதிரியின் பலம் சேரும் என்று விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். வால்மீகிக்கும், கம்பருக்கும் இடையேயான வித்தியாசம் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டு உள்ளது.
மா மரங்களின் பலம் எத்தகையது என்பதை விறுவிறுப்பூட்டும் வகையில் சொல்லியுள்ளது. ஒரு பெரும் இழப்பை, பெண் ஒருத்தியால் சரி செய்ய முடியும் என்பதை, லட்சுமணன்- – தாரை சந்திக்கும் நிகழ்வுகளில் விறுவிறுப்பு குன்றாமல் தந்துள்ளார். மொத்தத்தில், எத்தனை ராமாயண நுால்கள் நம்மிடம் இருந்தாலும், இந்த இரட்டை ராமாயண நுால் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று என்பது நுாலின் சுவையிலிருந்து புரிகிறது.
– தி.செல்லப்பா