மனித முன்னேற்றத்திற்கு தயக்கமும் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது. எனவே தயக்கம் பற்றிய புரிதல், அதைப் போக்குவதற்கான வழிமுறைகளையும் நூலாசிரியர் புதுவை முருகு இந்நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார். பல நல்ல செயல்களை தயக்கம் காரணமாக ஒத்திப்போடுவதும் தவிர்த்து விடுவதும் ஒரு தேக்க நிலையை உருவாக்கும்.
பழைய மற்றும் இளைய தலைமுறையினரின் அனுபவங்களை அலசி ஆராய்ந்து உளவியல் பார்வையுடன் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. உலக அளவிலான உளவியலாளர்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்களும் மேற்கோள்களும் நூலுக்கு மேலும் சுவையூட்டுவதாக அமைந்துள்ளன. உறுதியின்மை, தன்னம்பிக்கையின்மை, முயற்சியின்மை, நெஞ்சுறுதியின்மை, ஆதரவின்மை போன்ற பல அச்சங்களால் தயக்கம் ஏற்படுகிறது.
தயக்கத்திற்கும் இந்த இன்மைகளுக்கும் அவற்றைச் சமாளிப்பது எப்படி என்பது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. தயக்கத்தினால் ஏற்படும் நல்ல விளைவுகள் மற்றும் தீய விளைவுகளும் விவரிக்கப்பட்டுள்ளன. திருக்குறள் தொடங்கி கண்ணதாசன் கவிதைகள் வரை மேற்கோள் காட்டி தயக்கத்தால் ஏற்படும் பின்னடைவுகளும், அந்த தயக்கத்தை உதறித் தள்ளி முன்னேறுவதால் ஏற்படும் நன்மைகளும் மிகச்சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தயங்குவது ஏன் இன்னும் என்ற இந்த நூல் வருங்காலத் தலைமுறையினரிடம் சிந்தனையைத் தூண்டி, அறிவுப்பூர்வாக தயக்கத்தை எதிர் கொள்ள உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
- இளங்கோவன்