நிக்கோடின், பர்பரோஸ், கார்பன் -டை ஆக்ஸைட், ஆர்செனிக், பிரஸ்லிக் அமிலம், மீத்தேன், பார்மிக் அமிலம், கோலிடைன், பைரடின், கிரிஸால், பைரான், ரூபிடின், பார்மோலின், ஏட்டி டைன், விரிடைன், மெதிலைபின், பென்ஸ்பிரன், பார்மல்டி ஹைட், பார்மிக் ஆல்டிஹெட், வெடியுப்பு, மார்ஜூவானா, அக்ரோலின்... இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா?
காண்பதற்கு சிறியதாக இருக்கும் சிகரெட்டில் உள்ள, 270 வகையான ரசாயனப் பொருட்கள் சிலவற்றின் பெயர்களே இவை!
இதில், நிக்கோடினை தனியாகப் பிரித்து, ஒருவரின் ரத்தத்தில் செலுத்தினால் மரணம் நிச்சயம்; மற்ற ரசாயனப் பொருட்களும் ஏறக்குறைய அந்த வேலையை மெதுவாகச் செய்யக் கூடியவை தான்.
‘இவ்வளவு ஆபத்தை சுமந்து இருக்கும் சிகரெட்டை, இனியும் குடிக்க வேண்டுமா இளைஞர்களே...’ என்ற உண்மையான உள்ளன்போடு, இளைஞர்களிடம் இப்புதிய புத்தகத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார், நம் எழுத்துத் திலகம் அந்துமணி!
அந்துமணிக்கு நிறைய படிக்கும் பழக்கம் உண்டு என்பது நாம் அறிந்ததே... அவர் படித்ததில் தேர்ந்து எடுத்து பகிரும்போது, நமக்கு நிறைய புதிய விஷயங்கள் கிடைக்கின்றன. அப்படி அவர் படித்த மன்னர் பாஸ்கர சேதுபதி என்ற புத்தகத்தில் சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற, அனைத்து சமயங்களின் பேரவையில் கலந்து கொள்ள தகுதியும், அழைப்பும் இருந்தும், ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி, அந்த வாய்ப்பை சுவாமி விவேகானந்தருக்கு வழங்கினார்.
அமெரிக்காவில் இருந்து சுவாமி விவேகானந்தர் திரும்பி வந்த போது, அவரை பாம்பன் துறைமுகத்தில் வரவேற்றார், பாஸ்கர சேதுபதி. அதுவும், எப்படி தெரியுமா? விவேகானந்தரின் பாதத்தை, முதலில் தன் தலையில் தாங்கிய பின் தான், இம்மண்ணில் வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் வரவேற்றார்.
சுவாமி விவேகானந்தர் வருகையை சிறப்பித்து, நினைவுச் சின்னமும் எழுப்பினார். இப்போதும் அங்கு போனால், இந்த நினைவுச் சின்னத்தைப் பார்க்கலாம்; இப்படி ஒரு சரித்திர பூர்வமான நிகழ்வை, உணர்ச்சி பூர்வமாக தொகுத்து தந்துள்ளார்.
அதேபோல் பழைய, ‘கல்கண்டு’ கேள்வி – பதில் பகுதியில் படித்ததாக சொல்லி, சில கேள்விகளையும், அதற்கு தமிழ்வாணன் தந்த பதில்களையும் தொகுத்து தந்துள்ளார். ஒவ்வொரு பதிலிலும் கிண்டல், கேலி தெறிக்கிறது.
சாம்பிளுக்கு சில:
கே: சீன யுத்த நிதிக்காக, பெரியார் இன்னும் காலணா கூட கொடுக்கவில்லையே?
ப: அந்த நிதியில் இருந்து, தனக்கு எதுவும் தரவில்லையே என்று, அவர் கேட்காமல் இருக்கிறாரே என்பது தான், என் ஆச்சர்யம்!
கே: நண்பருக்கு கடிதம் எழுதும் போது, முகவரி பகுதியில் திராவிட நாடு என்று எழுதலாமா?
ப: திராவிட நாடு என்று என்ன... சுவர்க்கம் என்று கூட எழுதுங்கள்; போய் சேருமா என்பது தான் சந்தேகம்!
கே: எங்கள் அண்ணாவிடம் போய் காமராஜர் கற்றுக்கொண்டு வரட்டும் என்கிறாரே என்.வி.நடராசன்...
ப: எதை... பொடி போடுவதையா?
கே: பெரியார் எப்படி இருக்கிறார்?
ப: தான் வளர்த்ததில், தாடி மட்டுமாவது தன்னோடு இருக்கிறதே என்று (தாடியை) தடவிக்கொண்டு இருக்கிறார்!
அந்துமணி படிக்கும் சில புத்தகங்கள் வெகு சுவாரசியமானது. அதில், ‘இரண்டாயிரம் இன்சல்ட்டுகள்’ என்ற புத்தகமும் அப்படி தான்... புத்தகத்தில் உள்ள சில விஷயங்கள், ‘குபீர்’ சிரிப்பை வரவழைக்கின்றன.
வந்த விருந்தாளி வளவளன்னு ஆயிரம் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருந்தார்; நான், அவரிடம் இருந்து ஒரே ஒரு வார்த்தையைத் தான் எதிர்பார்த்தேன்; அந்த வார்த்தை, ‘போய்ட்டு வரட்டுமா’ என்பதாகும்!
அவர் வீட்டை காலி செய்த போது, வீட்டுக்காரர் கண்ணீர் விட்டார்; காரணம், பிரிய முடியாத வேதனையால் அல்ல; ஆறு மாத வாடகை பாக்கி...
அவன் தலையில் பத்து செகண்டுகளுக்கு மேல் எதுவுமே நிற்காது; தலைவலியைத் தவிர!
அந்த படம் பார்த்தவர்கள் யாரும் படம் மோசமில்லை என்று முணு முணுக்கவில்லை. காரணம், யாருக்கும் துாக்கத்தில் பேசும் பழக்கமில்லை!
இரண்டாவது முறை பார்த்த பின் தான் அவள், அவனைக் காதலித்தாள்; காரணம், முதல் முறை பார்த்தபோது, அவன் பணக்காரன் எனத் தெரியாது!
அந்துமணிக்கு நண்பர்கள் பட்டாளம் ஏராளம்; அவர்களில் ஓர் உயர் போலீஸ் அதிகாரியும் உண்டு. அவர் எப்போதும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். முகத்திலோ, வார்த்தையிலோ துளியும் மகிழ்ச்சி இல்லை. அவரை அப்படியே விட்டுவிட நினைக்காத (நண்பராயிற்றே) அந்துமணி, அதிகாரியை ஒரு மன நல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அந்த மன நல ஆலோசகர் சொன்ன ஆலோசனை, அந்த அதிகாரிக்கு மட்டுமல்ல; நம்மில் பலருக்கும் தேவை என்பதால், சில ஆலோசனைகளைத் தந்துள்ளார்.
வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வை சந்திக்காதவர்கள் யாரும் கிடையாது; ஆகவே, சகஜமாக அதைக் கடந்து செல்ல கற்றுக் கொள்ள வேண்டும். ஆபிஸ் மீட்டிங் மிக முக்கியம்; அதை விட, உங்கள் மனைவியின் மகிழ்ச்சி முக்கியம். உங்கள் பிள்ளையின் பள்ளி ஆண்டு விழா அதி முக்கியம்.
சின்ன சின்ன தவறுகளை பெரிது படுத்தாதீர்கள்; வாகனம் ஓட்டும்போது உங்களை மோசமாக ஒருவர், ‘ஓவர் டேக்’ செய்கிறாரா? கோபப்படாதீர்கள்; புன்னகை செய்யுங்கள்!
இப்படி எண்ணற்ற, ‘டிப்ஸ்’கள்!
இதற்காகவே, இப்புத்தகத்தை வாங்கி எல்லாரும் படிக்க வேண்டும்; மற்றவர்களுக்கும் பகிர வேண்டும்!
பாரதியார் பற்றிய விஷயங்களுக்காக, அவரது மகள்கள் இருவரின் படத்தை பிரசுரித்துள்ளார். இவர்களின் படங்களை பெரும்பாலும் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். தன் எழுத்துக்கு வலு சேர்க்க, இப்படி அபூர்வமான படங்களை தேடிப் பிடித்து சேர்ப்பது அந்துமணிக்கே உண்டான கை வண்ணம். இப்புத்தகத்தில் அப்படி நிறைய அபூர்வமான படங்கள் இடம் பெற்றுள்ளன.
இயற்கைக்கும், மனிதனுக்கும் பெரும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று ஆரம்பித்து, இயற்கையை போற்றி நீண்ட ஆழமான கட்டுரை ஒன்றைத் தந்துள்ளார்.
முடிவில் இயற்கை தான் வெல்லும் அதுவே பெரிது என்று சொல்லியிருக்கிறார். அவரது வார்த்தைகளுக்கு ஆதாரம் தான், இன்றைய சென்னை மற்றும் நெல்லை சம்பவங்கள்!
நிறைவாக, மறைந்த இவரது நண்பர் கிரேஸி மோகனிடம், ‘உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் யார்?’ என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, அவர் தந்த பதில், ‘வார்த்தை ஜாலங்களால், ‘எஸ்கேப்’ ஆகாமல் வாஸ்துவமான எழுத்துகளைத் தரும் அந்துமணியே எனக்கு பிடித்த எழுத்தாளர்’ என்று சொல்லியுள்ளார்.
அது நுாற்றுக்கு நுாறு உண்மை என்பதை, இப்புத்தகத்தை படிக்கும் போது நீங்களும் உணர்வீர்கள். மேலும், உங்களுக்கு புத்தாண்டு, பொங்கல் பரிசாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது!
– எல்.முருகராஜ்