தெய்வப் புலவர் திருவள்ளுவர் வரலாற்றையும், குறள் நெறிகளையும் நாடகக் காட்சியாக்கியுள்ள நுால்.
சோழன் ராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரன் மாரிவெண்கோ, பாண்டியன் பெருவழுதி என மூவேந்தர் முன் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாகக் கூறுகிறது. வாசுகியை வாழ்க்கைத் துணையாய் ஏற்பது, தான தர்மங்கள் செய்யும் காட்சிகள் சிறப்பு.
வாசுகி கிணற்றில் நீர் எடுக்கும்போது அவசரமாய் வள்ளுவர் அழைக்க, அப்படியே ஓடும் போது, அந்தரத்தில் குடம் நிற்பதாக உள்ள காட்சி அற்புதம். சமணம், புத்தம் இருந்த சமயச் சூழல், போதி மர நிழல், கொல்லாமை எல்லாம் பேசப்பட்டுள்ளன. விதிக்கும், விடாமுயற்சிக்கும் வேறுபாடு காட்டப்பட்டுள்ளது. உரையெழுதிப் படிக்கும் குறளை, திரை விலகி நடிக்கும் நல்ல நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்