உடல் பருமனை வெல்வது எப்படி என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சி அமைப்புகள், விளையாட்டு, திரைத்துறை பிரபலங்கள் தெரிவித்த ஆலோசனைகள், அனுபவங்கள் மற்றும் கருத்துக்களை தொகுத்து வழங்கி இருக்கிறார் கீதா கெங்கையா.
அவற்றில் சில: ஒவ்வொருவரும் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருக்க வேண்டும். உணவில் இருந்து கிடைக்கும் பல்வேறு சத்துகள் முழுமையாக உடலில் சேர வேண்டும் என்றால், ‘வைட்டமின் – டி’ அவசியம். சைவ உணவு சாப்பிடுபவர்கள், 5 – 10 கிராம் நெய் தினமும் சாப்பிடலாம்.
நொறுக்குத் தீனி சாப்பிட வேண்டும் போல தோன்றினால் பாப்கார்ன், அவல், பொரி, பொட்டுக்கடலை, மைக்ரோவேவ் அடுப்பில் பொரித்த வற்றல், வடகம் போன்றவற்றை சாப்பிடலாம். இது நொறுக்குத் தீனி சாப்பிட்ட திருப்தியை தரும்; உடல் எடையும் ஏறாது.
இட்லி, சாம்பார், ரசம், சாதம், பொரியல் என்று நம் பாரம்பரிய உணவுகள், சாப்பிடும் முறை மிகச் சிறந்தது. இதைப் பின்பற்றினால், அவசியம் இல்லாமல் எடை அதிகரிக்காது. வெள்ளைச் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது, உடல் எடை குறையவும் அதிகரிக்காமல் இருக்கவும் உதவும்.
ஒரு டம்ளர் இளநீரில், ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை போட்டால், ஐந்து நிமிடத்தில் விதைகள் உப்பி, ஜவ்வரிசி போல ஆகியதும் குடித்தால், வெயிலுக்கும் இதம்; உடல் எடையும் அதிகரிக்காது.
குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதில், பாலுக்கு எந்த தொடர்பும் இல்லை. இரவு வெகுநேரம் கழித்து சாப்பிட வேண்டிய நிலை வந்தால், பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. பதினைந்து நிமிடங்கள்நடப்பது அல்லது ‘ஜாகிங்’ செய்வதால் என்ன பலன் கிடைக்குமோ, அதை விட இரண்டு மடங்கு பலன், படி ஏறுவதால் கிடைக்கும்.
இதுபோன்று கூறப்பட்டுள்ள யோசனைகளை அவரவர் தங்கள் தேவைக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தினால், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை.
– இளங்கோவன்