அபங்கம் என்ற சொல் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பங்கம் என்றால் தடை. அபங்கம் என்றால், தடையின்றி பாடப்படும் பாடல். இது ஒரு மராத்தி சொல். பண்டரிபுரத்தில் அருள்பாலிக்கும் விட்டலனின் பக்தர்கள், தம்புராவை இசைத்தபடியே அபங்கப் பாடல்களை பாடுவர்.
இந்தப் பாடல்கள் 5,000த்துக்கும் மேல் உண்டு. இவற்றில் சிலவற்றை கேட்டிருக்கவும் கூடும். ஆனால், இதற்கான பொருள் தெரிய வேண்டுமே! அந்தப் பணியை சிறப்பாகச் செய்திருக்கிறது இந்த நுால்.
அபங்கத்தில் பொறுக்கி எடுத்த சுவையான பாடல்களை பொருளுடன் விளக்கியுள்ளார். தொடர்ந்து, யார் அதைப் பாடினாரோ, அவருக்கும் விட்டலனுக்கும் இடையே அன்பை, பக்தியை பக்தி ரசம் சொட்ட சொட்ட எழுதியுள்ளார்.
காலை இழந்தார் ஒரு பக்தர்... அவருக்கு கை கொடுத்தார் விட்டலன், விஷயமே வித்தியாசமாக உள்ளதல்லவா! விட்டலனுக்காக தன்னை மரமாகவே மாற்றிக்கொண்டாள் ஒரு பக்தை... அவள் யாரோ!
தோண்டினால் தான் தண்ணீர் ஊறும்... ஆனால், பாடினாலே ஒரு கிணற்று நீர் மேலெழுந்து வருமாமே! அப்படியா... இது என்ன புதுமை. பாண்டுரங்கனும், பரமசிவனும் ஒருவர் தானாம்... மனிதர்கள் வாயிலேயே அவ்வளவு எளிதில் வேத மந்திரங்கள் வராது... ஆனால், ஒரு எருமை வேதம் ஓதியதாம்... தங்கம் வேண்டாம்; தரித்திரம் வேண்டும் என்று யாராவது கேட்பார்களோ! கேட்டாரே, ஒரு விட்டல பக்தர்.
‘ஆமாம்... என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... இப்படியெல்லாம் புதுசு புதுசாக சொன்னால், இத்தனை வித்தியாசங்களையும் உள்ளடக்கிய இந்த புத்தகத்தை உடனே வாங்கியாக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படாதா என்ன!’ என்று கேட்பது புரிகிறது.
பிரச்னையே வேண்டாம்... உடனே வாங்கி விடுங்கள். இந்த நுால் தீரும் முன்... உங்கள் பக்திப் பசிக்கு தீனி போடும் புத்தகம் இது.
– தி.செல்லப்பா