போட்டித் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதிகம் குறிவைப்பது,
டி.என்.பி.எஸ்.சி.,யின் குரூப் – 4 தேர்வு. இந்த ஆண்டு, 6,244 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் பயிற்சி மைய நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாசலம், போட்டித் தேர்விற்கு பயிற்சி அளிப்பதில் 19 ஆண்டு கால அனுபவம் மிக்கவர். அவர் எழுதியுள்ள இந்த புத்தகம் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்.
இந்த புத்தகத்தில், பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவு தொடர்பான விளக்கக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுத் தமிழில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கியது.
பொது அறிவு பிரிவில் கணிதவியல் மற்றும் அறிவுக்கூர்மை, அறிவியல், புவியியல், இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம், தமிழக வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழக வளர்ச்சி நிர்வாகம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
முக்கிய தினங்கள், உலகம், இந்தியா, தமிழக முதன்மை மனிதர்கள், விளையாட்டு சம்பந்தமான தகவல்கள், விருது பட்டியல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள், புவிசார் குறியீடுகள் என தகவல்களை வழங்கியுள்ளதால், மாணவர்கள் வேறு எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை.
தகவல்கள் சிறு சிறு குறிப்புகளாக, அட்டவணைகளாக, எளிதில் புரியும்படியாக கொடுக்கப் பட்டுள்ளதே தனிச் சிறப்பு. மாணவர்கள் குறிப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பகுதி முடிவிலும், தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களின் அடிப்படையில் உருவான மாதிரிப் பயிற்சி வினாக்கள், விடைகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன. அரசு வேலைக்கான கனவில் இருப்பவர்களுக்கு இந்த புத்தகம் வழிகாட்டும்.
– சிவா