பள்ளி ஆசிரியர் பணி அளப்பரியது; வருவது, சொல்லித் தருவது, கிளம்புவதுடன் வேலை முடிவதில்லை. ஒரு குழந்தைக்கு, வீட்டில் பெற்றோர் போல், பள்ளியில் ஆசிரியர் பாதுகாப்பு உணர்வு தர வேண்டும். புதிதாக பணியில் சேரும் ஆசிரியருக்கு சில தடுமாற்றங்கள் ஏற்படும்.
சீனியர்களிடம் கேட்கலாமா, கூடாதா என்ற தயக்கம் இருக்கும். இது போல ஆயிரம் கேள்விகளுடன் இருக்கும் இளம் ஆசிரியர்களுக்கு இந்த புத்தகம் வரப்பிரசாதம்.
சமுதாயத்தில் ஆசிரியரின்பங்கு, பள்ளியில் நடந்து கொள்ள வேண்டிய விதம், மாணவர்களுடன் காட்ட வேண்டிய உறவு, நிர்வாகத்தை கையாள்வது போன்ற சந்தேகங்களுக்கு உரிய பதில்கள் இதில் உள்ளன.
பெண் குழந்தைகள் முன்னேற்றம், நீங்கள் தான் பிரைம் மினிஸ்டர், ஆசிரியர் பொய் சொல்லலாமா, தாய் அல்லது தந்தையுடன் தனித்து வளரும் குழந்தைகளை எப்படி கையாள்வது? படபடப்பை களைவது என ஆசிரியப் பணியின் அத்தனை கோணமும் விளக்கப்பட்டுள்ளது.
இதுதான் விஷயம் என்பதை, சொந்த அனுபவங்களோடு அழகாக எடுத்து சொல்லியுள்ளது, புரிய வைக்கும் வகையில் உள்ளது. அடுத்து எதை சொல்ல வருகிறது என ஆர்வமூட்டுகிறது.
புத்தகத்தை எழுதியுள்ள புருஷோத்தமன் பிரபல பள்ளி நிர்வாகி. இந்தத் துறையில் 35 ஆண்டு கால அனுபவம் உடையவர். கற்றலில் பின்தங்குவோரை முன்னேற்ற, வேறு கோணத்தில் கருத்துகளை பதிவு செய்துள்ளார். சீனியர் ஆசிரியர்களும் இது போன்ற அணுகுமுறை தெரியாமல் தவிப்பர்; பிரச்னையை கையாள இயலாமல் இருப்பர்.
அவர்களுக்கும், கிராமப்புறத்தில் பணியாற்றுவோருக்கும் நல்ல படிப்பினைகள் தரும். இந்த புத்தக கருத்தை மனதில் கொண்டால் ஆசிரியர் – மாணவர் உறவு மேம்படும். அனைத்து கல்விக்கூடத்திலும், ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டிய நுால்!
– அ.அக்சீலியா அனிடா