தமிழக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய அறிஞர்களை அறிமுகம் செய்யும் நுால். சங்க காலத்தில் தமிழக மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்த அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தி, சிந்து சமவெளி நாகரிக எழுத்துகளை ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன் உள்ளிட்ட 60 பேரை சிறப்பிக்கிறது.
புதுச்சேரி பிரஞ்சு அரசில் பணியாற்றிய ஆனந்தரங்கன் பிள்ளை எழுதிய நாட்குறிப்புகள், வரலாற்றில் முக்கிய செய்திகளை கொண்டுள்ளன. அந்த செயல்பாடு பற்றி அறிய தருகிறது.
தொடர்ந்து பல துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, தகவல்களை திரட்டி தமிழக வரலாற்று பெருமையை நிலைநாட்டியுள்ள காலின் மெக்கன்சி, ஜேம்ஸ் வெல்ஷ், ராபர்ட் கால்டுவெல், வீலர், எவன்ஸ் பெல், ராபர்ட் பூரூஸ்புட் உட்பட அயல்நாட்டு அறிஞர்கள் பற்றி தரப்பட்டுள்ளது.
கோவையில் சிறுவாணி குடிநீர் திட்டம் அமைய துாண்டுதலாக இருந்த சேலம் நரசிம்மலு நாயுடு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, மக்கள் வாழ்க்கை முறையை ஆவணப்படுத்திய எட்கார் தர்ஸ்டன் என, வரலாற்றுக்கு அழுத்தமான பணிகள் செய்த பலர் பற்றிய குறிப்புகள் உள்ளன.
தமிழர் பண்பாட்டு வரலாற்றில் பெரும் திருப்பம் ஏற்படுத்தியது, நாணயவியல் அறிஞர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் சங்க காலத்தில் தமிழக மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களின் கண்டுபிடிப்பு. தமிழ் செம்மொழி தகுதி பெற அவை பெரிதும் உதவியதுடன், தமிழர் வரலாற்று ஆய்வில் புதிய கதவுகளையும் திறந்து வைத்தது. அறிஞர் கிருஷ்ணமூர்த்தியின் பணிகள் குறித்து இந்த புத்தகம் விரிவாக விளக்கியுள்ளது.
சிந்துவெளி நாகரிக கால எழுத்து பொறிப்புகள் குறித்த ஆய்வுகளில், புதிய தடம் பதித்து தகவல்களை கண்டறிந்தவர் அறிஞர் ஐராவதம் மகாதேவன். அவரது பணிகள் குறித்தும் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு அறிஞரும் பிறந்த கால அடிப்படையில் தகவல் தொகுப்பு உள்ளது. தமிழக வரலாற்றை புதிய நோக்கில் அணுகும் விதமாக, பல துறைகளையும் ஆய்வுகளால் அணுகிய 60 அறிஞர்களின் சீரிய பணிகளை விளக்கும் நுால்.
– மதி