திராவிட அரசியல் கட்சிகளே, தமிழகத்தை ஆட்சி செய்கின்றன. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளால் வளர முடியவில்லை.
இந்த அரசியல் சூழலில், குறுகிய காலத்தில் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி; தொடர்ந்து பல மாநிலங்களிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
தமிழகத்தில் அக்கட்சியால் வேரூன்ற முடியவில்லை. இந்த நிலையில், தமிழக பா.ஜ., தலைமைப் பொறுப்பை ஏற்றார் அண்ணாமலை. தீவிரமான பேச்சு, கடும் உழைப்பு மற்றும் செயல்பாட்டால் திராவிட எதிர்ப்புக் கொள்கையை, பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தார்.
தீவிர பிரசாரம் வாயிலாக தமிழக மக்களிடம் பிரபலமடைந்தார். இது, குறுகிய காலத்திலேயே அரசியல் களத்தில் பல படிகள் உயர அவருக்கு உதவியுள்ளது.
அவரது அதிரடிப் பேச்சு, பிற கட்சி அரசியல்வாதிகளை வாய்மூடி மவுனிக்க வைத்துள்ளது. தமிழகத்தில் கிராமங்களில் சென்று மக்களை நேரடியாக சந்தித்தால் மட்டுமே, கட்சியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என்ற முடிவுக்கு வந்தார் அண்ணாமலை. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுதான், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுதும் நடந்த யாத்திரை.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரசார நடைபயணம் மேற்கொண்டார் அண்ணாமலை. அது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எண்ணற்றோரை, பா.ஜ., பக்கம் திருப்பியது. இது சாதாரண விஷயம் அல்ல.
ஆறுமாத காலம் தொடர்ச்சியாக, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை வாயிலாக தமிழக மக்களை நேரடியாக சந்தித்தார் அண்ணாமலை. ஒவ்வொரு ஊரிலும், கண்ட பிரச்னை, அவற்றுக்கான தீர்வு, அரசியல் நிலவரத்தை, ‘தினமலர்’ நாளிதழில் அப்போது கட்டுரையாக எழுதி வந்தார்.
அவற்றைத் தொகுத்து இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நுால்.
-– சி.கலாதம்பி