சமூக வலைதளத்தில் வீடியோக்களை ரசித்து பார்ப்போரை, கதை வாசிக்க வைக்கும் வினோத முயற்சியாக மலர்ந்துள்ள சிறுகதை தொகுப்பு நுால்.
தமிழ் இலக்கியம் கடல் போன்றது. இளையோருக்கான கதைகள் பவளப்பாறையைப் போல அரிதானவை. இளையோருக்கு கவனம் குவியும் நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு, 5 முதல் 10 நிமிடங்களில் படித்து முடிக்கக்கூடிய 20 சிறுகதைகள் தொகுப்பில் உள்ளன.
சிறுகதைகளில் வரும் சம்பவங்கள் தினமும் சந்திப்பவை தான். வரும் கதாபாத்திரங்களும் தெரிந்தவர்களாக இருக்கலாம். வாசித்து பார்த்தால் அவற்றை கண்டுபிடிக்கலாம்.
எதையும் சரியாக தெரிந்து கொள்ளாமல் தவறாக புரிந்து கொள்வது தவறாக முடியும். வேண்டிய விஷயத்தை கேட்க தயக்கம் காட்டினால் ஆபத்தில் முடியலாம்; கற்பனையில் திண்டாடுவது தவறு. எந்த விஷயமானாலும் நேரே கேட்டு விடுவதே சிறந்தது.
அனைத்து வட்டார மொழிகளும் தனித்துவம் வாய்ந்தவை தான்; விட்டுக் கொடுத்தால் பெரிய பிரச்னையும் முடிந்துவிடும்; எந்தவொரு பொருளாக இருந்தாலும் எளிதில் கிடைக்கிறது என்பதற்காக வீணாக்கக்கூடாது. எவ்வளவு ஆர்வமாக இருந்தாலும், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் எதையும் செய்து மாட்டிக்கொள்ளக்கூடாது.
ஒரு வயதிற்கு மேல் குழந்தைகளாய் மாறிவிடும் தாத்தா, பாட்டிக்கு புதுமைகளை மறுக்கக்கூடாது. தலைவராக இருப்பவர் மக்களின் அறியாமையை தன் சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்ளக்கூடாது.
செல்லப்பிராணிகளை சிறப்பான முறையில் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அவற்றை வாங்க வேண்டும்; பராமரிக்க முடிந்தால் மட்டுமே வாங்க வேண்டும். சிலருக்கு தேவையில்லாத பொருள், வேறு ஒருவருக்கு பொக்கிஷமாக இருக்கலாம். இந்த கருத்துகளை தாங்கிய கதைகளை படித்து முடித்தால் நிச்சயம், ‘அட நல்லாயிருக்கே’ என நினைப்பீர்கள்.
– இளங்கோவன்