சித்தர்கள் என்றவுடன் நினைவில் வருவது யார் யார்... பழனி முருகன் நவபாஷாண சிலையை அர்ப்பணித்த போகர். இன்னொருவர், ‘கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா’ என்ற சொற்றொடரில் இடம் பெற்ற கொங்கணவர்என்ற பெயருக்கு உரியவர். நெல்லை தாமிரபரணி கரையில் சிவனை, ‘நாறும்பூநாதா’ என அழைத்து சாய வைத்தவர். இப்படி 18 பேர், சித்தர் என்ற சிறப்பு பெயருடன் திகழ்கின்றனர்.
நெல்லை வந்த அகத்தியபெருமானும் சித்தர் தான். நெல்லை, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் பலர் வாழ்ந்திருக்கின்றனர். இவர்களின் நினைவிடங்களை கோவிலாக போற்றுகின்றனர் மக்கள்.
இப்படி தேடிப்பிடித்த சித்தர்கள் வரலாறு, 16 தலைப்புகளில் அழகுபட எழுதி தொகுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து, சித்தர் அந்தஸ்துக்கு உயர்ந்த ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள், விபத்து வாழ்விலே இனி இல்லை என வாகனம் ஓட்டும் அனைவருக்கும் அருள்தர காத்திருக்கும் இலத்துார் சித்தர், இமயமலையில் புகழ் பெற்ற பாபாஜி பக்தர்களே வணங்கும் கூனியூர் முத்துராமலிங்கம் சுவாமி, அம்பாசமுத்திரம், கோடரங்குளம் தாமிரபரணி கரையில், மண்ணையே மருந்தாக்கி நோய்களை குணப்படுத்தும் ராமலிங்கம் சுவாமிகள்.
குளத்து நீரை நெய்யாக மாற்றிய கோடகநல்லுார் சித்தர், அந்தரத்தில் தியானம் செய்த பிச்சி சித்தர்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அனைவரது வரலாறும் மெய் சிலிர்க்க வைப்பது மட்டுமின்றி, இப்போதே தரிசித்து விட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.
கும்பகோணத்தை சுற்றியுள்ள நவக்கிரக தலங்கள், நெல்லை, துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ கயிலாயங்கள், நவ திருப்பதிகளுக்கு சுற்றுலா செல்வது போல், இந்த 16 சித்தர் கோவில்களுக்கும் சுற்றுலா வாகனங்கள் ஏற்பாடு செய்தால் சுற்றுலா மேலும் வளரும். சித்தர்களின் அருளும் கிடைக்கும்.
– தி.செல்லப்பா