சினிமாவில் தொழில் ரீதியாக ஏற்பட்ட பழக்கம், நட்பாக மலர்ந்து கனிந்ததை வடித்துள்ள நுால். திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவுடன் ஏற்பட்ட நட்பை உணர்வுப்பூர்வமாக தன் வரலாற்று பாணியில் பதிவு செய்துள்ளார் புகைப்படக் கலைஞர் யோகா. வாழ்வில் 25 ஆண்டு கால நிகழ்வுகளின் சுவாரசியம் குன்றாது, ஆவணம் போல் தொகுக்கப்பட்டுள்ளது.
கட்டுரைகளில் திரைத்துறை, தமிழக அரசியல் சார்ந்த அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. நெருக்கம் ஏற்படுத்திய தகவல்கள் உள்ளத்தை தொடும்படி பதிவாகியுள்ளது. கலகலக்க வைத்த சினிமா படப்பிடிப்பு தளங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், விமான, ரயில் பயணங்கள், விருந்து நிகழ்வுகள் ஓவியமாக தீட்டிக் காட்டப்பட்டுள்ளது.
குடும்பம், பொது நிகழ்வுகள், தொழில் ரீதியான சந்திப்புகளை நெகிழ்வுடன் விவரிக்கிறது.
தமிழக வரலாற்றுடன் தொடர்புடைய சம்பவங்களை தொட்டுக் காட்டுகிறது. ஒவ்வொரு நிகழ்வும் உயிரோட்டம் நிறைந்த சித்திரம் போல் நினைவின் வழியாக செதுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் நெகிழ்ச்சியும், உரிமையும், வாக்கு தவறாமையும் பிரதிபலிக்கின்றன. வாழ்வின் நம்பிக்கை மற்றும் அக்கறையுள்ள அடிச்சுவடுகளை எங்கும் பார்க்க முடிகிறது. குடும்பத்தினர், நண்பர்களுடன் பாரதிராஜாவின் நெருக்கமான செயல்பாடுகளை புதிய கோணத்தில் நோக்கி மதிப்புமிக்கதாகக் காட்டுகிறது.
குடும்ப திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கி, விபரங்கள் முழுமையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. நட்பைப் பேணுவதிலும், புகைப்படத் தொழிலிலும் படிப்பினைகள் நிறைந்துள்ளன. மாண்புள்ள நட்பு வாழ்வை மதிப்புடன் வெளிப்படுத்துகிறது. திரைக்கலைஞர் பாரதிராஜாவின் நட்புறவை உருக்கமாகக் காட்டும் அனுபவ நுால்.
– மலர்