வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, தி.நகர், சென்னை- 17. (பக்கம்:232)
பண்டைத் தமிழ் இலக்கண நெறிகளினின்றும் விலகி இக்காலத் தமிழ் கெட்டுக் கிடக்கிறது. ஏடெழுத்தாளரும் மேடைப் பேச்சாளரும் பல்கியுள்ள இந்நாளில் எழுத்திலும் பேச்சிலும் பிழைகள் மண்டிக்கிடக்கின்றன. அப்பிழைகளையெல்லாம் நுட்பமாக சுட்டிக் காட்டித் தொல்காப்பிய இலக்கண அடிப்படையில் பல செய்திகளை நூற்கடல் இலக்கணக் கடல் தி.வே.கோபாலய்யர் இந்நூலுள் தந்துள்ளார்.
இருபுலவர், பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்றாற் போல் வருவனயாவும் பிழையாம். புலவர் இருவர், ஆழ்வார்கள் பன்னிருவர், நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்றாற் போல் தொடர்களை அமைத்தல் வேண்டும். இவ்வாறே சில நண்பர்கள், பல பெரியோர்கள் என்பன போல் வருவனவற்றை நண்பர்கள் சிலர், பெரியோர்கள் பலர் என்றே அமைத்திடல் வேண்டும்.
உயிர் எழுத்துக்களையும்"யா' எனும் எழுத்தையும் முதலாக உடைய அஃறிணைச் சொற்களின் முன், ஒன்று என்பதைக் குறிக்க ஓர் எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஓர் அரசு, ஓர் இல்லம், ஓர் யானை என்பன வழாநிலை (பிழையற்றன). ஒரு உலகம் எனல் பிழை. அன்றியும் ஓர் அரசன் எனலும் பிழை; அரசன் ஒருவன் எனல் வேண்டும்.
இவ்வாறு தொடங்கி, அது என்னும்சுட்டுச்சொல், அஃது என்னும் சுட்டுச்சொல் இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அன்மை, இன்மை இவற்றின் உண்மைப் பொருள் என்ன? இன்மை, உடைமை, உண்மை இவற்றிடையே உள்ள வேறுபாடுகள் எவை? என்பன போல் பற்பல இலக்கண விளக்கங்கள், நூற்பாக்களோடு இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அன்புள்ள, பணிவுள்ள என்றெழுதிடல் தவறு, அன்புடைய பணிவுடைய என்றே எழுதிடல் வேண்டும்.
வேண்டும் எனும் சொல்லுக்கு எதிர்மறையாக வேண்டாம் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. இலக்கண நெறிப்படி இச்சொல் வேண்டா என்று தான் இருக்க வேண்டும். இந்நாளில் ஒழிக! வாழ்க! என்றெல்லாம் முழக்கமிடுகின்றனர். ஒழிதல் என்னும் சொல்லின் சரியான பொருள் எஞ்சியிருத்தல், "ஒழிய' என்பது தவிர்த்து என்றும், "ஒழியா' என்பது நீங்கா எனும் பொருளிலும் வரும்.
ஈ, ஐ என்பன இடைச்சொற்களாக எவ்வாறு பயன்பட்டன என்றும், வேற்றுமை உருபுகள் இல், இன் எனும் இரண்டின் வேறுபாடு என்ன என்றும் எடுத்துக்காட்டுகளோடு விளக்கப் பட்டுள்ளது. அளபெடைகள் பற்றிய ஆராய்ச்சி, உத்திகள் பற்றிய விரிவான செய்திகள், நூலுள் வரக்கூடாத பத்துக்குற்றங்கள், தொல்காப்பியத்துள் "சிதைவுகள்' என்று சொல்லப்படுதல் ஆகியனப் பற்றியெல்லாம் ஆராயப்பட்டுள்ளது.
எள் என்று இந்நாளில் குறிப்பிடும் உணவுப் பொருளின் பழைய சொல் "எண்' என்பதாம். எண் எனில் எட்டு என்றும், எண்ணிக்கை என்றும் பொருள் தருவதோடு, பழைய இலக்கியங்களில் எள் எனும் உணவுப் பொருளையும் குறித்துள்ளமை காணலாம். எண்+நெய்=-எண்ணெயாயிற்று.
இவ்வாறு தமிழறிஞர்களுக்கும் பயன்படக்கூடிய பல நுட்பமான செய்திகள் இந்நூலில் எழுதப்பட்டுள்ளன. அரியநூல் இது; அனைவரும் அறிய வேண்டியவை ஆயிரம் உண்டிதனில், படித்துப் பயனடைவோமாக