சாந்த மங்கை பதிப்பகம், 3, வாசுகி தெரு, கிருஷ்ணாபுரம், அம்பத்தூர், சென்னை-600 053. (பக்கம்: 944.)
கம்பன் காவியத்தில் வசப்படாத தமிழர்களே இருக்க முடியாது என்று கூறத் தக்க வகையில், இன்றைய நிலை இருக்கக் காண்கிறோம். கம்பன் காவியத்தில் மிக மிக சுவைமிக்க பகுதி சுந்தர காண்டம் ஆகும். சீதையின் உடல் அழகும், ராமனின் குண அழகும், அனுமனின் வீரத்தின் அழகும் இக்காண்டத்தில் காணலாம். சுந்தர காண்டம் படிப்பதால் மனம் அமைதி பெறும்; அல்லல் அகலும் என்று முன்னோர் கருதினர். அத்தகு பெருமை பெற்ற சுந்தர காண்டத்திற்கு மிக எளிய பழகு தமிழில் இவ்வுரையாசிரியர் உரை எழுதி, மிகப் பெரிய சாதனை செய்துள்ளார் என்று உறுதியாகக் கூறலாம்.
இந்நூலின் படலப் பகுப்பு குறித்துக் கூறுமிடத்தில், முதல் படலம் கடல் தாவு படலம், இறுதிப் படலம் திருவடி தொழுத படலம் என்று கூறி, ""பிறவிப் பெருங்கடல் நீந்துவார்' என்ற திருக்குறளை நினைவுபடுத்துவதும் (பக்.2), ஊர் தேடு படலத்தில் ஊர் என்பது இலங்கை மாநகரையே குறிக்கிறது என்பதும் (பக்.56), சூடாமணிப் படலத்தில் "அண்ட முதல் நாயகன்' என்ற சொற்றொடரை ஆதி பகவன் முதற்றே யுலகு' என்பதன் பிரதிபலிப்பாகக் கூறுவதும் (பக்.388), திருவடி தொழுத படலத்தில், "எய்தினன் அனுமனும்' என்ற பாடலுக்கு ராமனின் திருவடிகளை அனுமன் தொழாததிற்கு உரையாசிரியர் கூறும் நயமும் (பக்.82) உரையாசிரியரின் நுண்ணிய அறிவாற்றலுக்குச் சான்று கூறும் இடங்கள் ஆகும்.
இவ்வுரையாசிரியர், வை.மு.கோ., உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழக உரை, உ.வே.சா., உரை ஆகியவற்றின் துணையுடன், தம் கருத்திற்கு அரணாகத் திருக்குறள், சிலப்பதிகாரம், நள வெண்பா, நாலாயிர திவ்ய பிரபந்தம், வில்லிபாரதம், தொல்காப்பியம், திவாகர நிகண்டு எனப் பல நூல்களையும் காட்டுவதால், அவரின் விரிந்த நூலறிவை நாம் உணர்கிறோம்.
முனைவர்கள் அவ்வை நடராசன், தெ.ஞானசுந்தரம், சுதா சேஷய்யன், கவிமாமணி மதிவண்ணன், பேராசிரியை ஆர்.ருக்மணி ஆகியோரின் அணிந்துரை
களும், சிலம்பொலி சு.செல்லப்பனின் ஆய்வுரையும் நூலுக்கு மிகவும் பெருமை சேர்க்கின்றன.
நல்ல கட்டமைப்புடன் தெளிவான அச்சில், பிழையில்லாதபடி இந்நூல் திகழ்வதால், எல்லா தமிழர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய தகுதி பெறுகிறது. உரையாசிரியரின் பணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.